சிராங்கூனில் உள்ள நெக்ஸ் கடைத்தொகுதியில் பெண்ணை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் ஆடவர், மேலும் ஐந்து மானபங்கக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஷரில் ஹசன், 49, எனப்படும் அந்த ஆடவர் மீது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
நெக்ஸ் கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் இருந்து மேலே சென்றுகொண்டு இருந்த ஷரில், பெண் ஒருவரின் பின்புறத்தை, வேண்டுமென்றே தொட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் புகார் கிடைத்த 15 மணிநேரங்களில், கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 6) ஷரில் காவல்துறையிடம் சிக்கினார். அவரை அடையாளம் கண்டு கைது செய்ய சிசிடிவி கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான படங்கள் உதவின.
அவர் ஏற்கெனவே குற்றம் புரிந்தவர் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. இருப்பினும் அதுபற்றிய விவரங்கள் அவற்றில் காணப்படவில்லை.
அந்த ஆடவர் குறைந்தபட்சம் ஐந்து மானபங்கக் குற்றங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
மானபங்கக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியன தண்டனைகளாக விதிக்கப்படலாம்.
மானபங்கக் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த, பொழுதுபோக்குக் கூடங்கள், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் காவல்துறை தெரிவித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“சமூகத்தின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகத் திகழக்கூடிய பாலியல் குற்றவாளிகளைக் காவல்துறை சகித்துக்கொள்ளாது,” என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.