நான்கு மில்லியன் வெள்ளி மதிப்புள்ள சொத்துச் சண்டையில் நீதிமன்றத்தின் முடிவை மதிக்காத பெண்ணுக்கு இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஃபேரர் ரோட்டில் உள்ள டி’லீடான் தனியார் அடுக்குமாடி வீட்டின் மதிப்பு ஏறக்குறைய நான்கு மில்லியன் வெள்ளியாகும். அந்த வீடு முன்னாள் காதலரின் பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதால் அதனை அவரிடம் ஒப்படைக்குமாறு பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அந்த வீட்டை மாற்றுவதற்கான பத்திரங்களில் அவர் கையெழுத்திட மறுத்ததால் ஆடவர் மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாடினார்.
நீதிமன்றம் தலையிட்டு, சொத்தை ஆடவரின் பெயருக்கு மாற்றிய பிறகும் அவர் ஆவணங்களில் கையெழுத்திடாமல் இழுத்தடித்தது நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது.
இதையடுத்து, அவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருமணமான ஆடவர், தனது தொழிலை சுமார் $15 மில்லியனுக்கு விற்று, நான்கு குழந்தைகளைக் கொண்ட ஒற்றைப் பெற்றோரான அந்தப் பெண்ணை 2016ல் ஒரு மாநாட்டில் சந்தித்தார்.
இருவரும் வெளிநாட்டவர்கள். விரைவில் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக சிங்கப்பூரில் வாழ்க்கையைத் தொடங்க அவர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்த அந்த நபர், பின்னர் தனது காதலிக்கு 7 மில்லியன் வெள்ளியை மாற்றினார். அவர், அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு அடுக்குமாடி வீடு, ஒரு கடை, ஒரு கார் ஆகியவற்றை வாங்கினார். மேலும் பல செலவுகளுக்கும் அந்தப் பணத்தை பெண் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் 2018ல் இருவருக்கும் இடையே உறவு மோசமடைந்தது. 2019ல் அவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, அந்தப் பெண் புகார் கொடுத்ததால் காதலர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், தனது பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளையும் பணத்தையும் திருப்பித் தருமாறு கேட்டு வழக்குத் தொடுத்தார்.

