காவல் அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் திட்டியவருக்கு $1,600 அபராதம்

காவல் அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் திட்டியவருக்கு $1,600 அபராதம்

1 mins read
3a047b6f-761b-4987-b8d2-4879ba058987
டாரியா செவோஸ்தியானோவாவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) $1,600 அபராதம் விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்துக்கு வெளியே குடிபோதையில் இருந்ததால் கைது செய்யப்பட்ட ரஷ்ய மாது ஒருவர், தடுப்புக்காவலில் இருந்தபோது காவல்துறை அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

தொந்தரவு விளைவித்ததாக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டாரியா செவோஸ்தியானோவாவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) $1,600 அபராதம் விதிக்கப்பட்டது.

இவருக்குத் தண்டனை விதிப்பதில் மற்ற இரு குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதியின் முதல் தளத்தில் உள்ள கழிவறையில் இரு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டதன் தொடர்பில் கடந்த ஆண்டு மே 15ஆம் தேதி இரவு 11 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அவ்விரு பெண்களில் செவோஸ்தியானோவாவும் ஒருவரா என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அதே இரவு 12.02 மணிக்கு ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்துக்கு வெளியே இவர் குடிபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது.

பொது இடத்தில் தொந்தரவு விளைவித்ததற்காக கைது செய்யப்பட்ட செவோஸ்தியானோவா, போலிஸ் கெண்டன்மண்ட் காம்பிளெக்சில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

தடுப்புக்காவலில் இவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, பெண் காவல் அதிகாரி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசினார்.

மேலும், ரத்தக் கறை உடைய திசுத் தாள் ஒன்றை அந்த அதிகாரி மீது செவோஸ்தியானோவா வீசினார்.