மலேசியா-சிங்கப்பூர் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) தம் உடலைக் கொண்டு கார் ஒன்றை வழிமறித்த மாது ஒருவர், இந்தச் சம்பவம் குறித்து கருத்துரைத்துள்ளார்.
ஸுவாங் எனும் பெயர் கொண்ட அவர், மற்றோர் ஓட்டுநரால் தாமும் தம் கணவர் தங்கள் தடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறினார்.
ஃபேஸ்புக் பயனர் இலெக்சியோ லிம் என்பவர், இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார். சாலையின் இடது தடத்தில் செல்லும் டொயோட்டா பிரையஸ் காரிடம் முன்வருமாறு அந்த மாது சமிக்ஞை காட்டுவது அக்காணொளியில் தெரிந்தது.
ஆனால், அந்தக் காணொளி முழு நிலவரத்தையும் காட்டவில்லை என ‘8வோர்ல்ட்’ எனும் சீன ஊடகத் தளத்திடம் அவர் கூறினார். தாமும் தம் கணவரும் வரிசையில் முந்தவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
அப்போதுதான் தாங்கள் சோதனைச்சாவடியிலிருந்து வெளியேறியதாகச் சொன்ன அவர், சாலையின் இடது தடத்தில் இணைந்தபோது, வலது தடத்திலிருந்து கறுப்பு கார் ஒன்று தங்கள் தடத்தில் குறுக்கிட முற்பட்டதாகக் கூறினார்.
“இடம் மிகவும் நெரிசலாக இருந்ததை நானும் என் கணவரும் உணர்ந்தோம். கார்களுக்கு இடையே பாதுகாப்பான தூர இடைவெளியும் இல்லை. எனவேதான், மற்றோர் ஓட்டுநரை அவர் நுழையவிடவில்லை,” என்று அந்த மாது விளக்கினார்.
வழிவிடாததால், அந்தக் கறுப்பு கார் ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஒலி எழுப்பியதோடு, தங்கள் தடத்திற்குள் காரை நுழைக்க முற்பட்டதாக அந்த மாது சொன்னார். இதனால் தடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வரிசையிலிருந்து விலகிய அவரின் கார், பேருந்து-கார் தடங்களைப் பிரிக்கும் சாலைத் தடுப்பு மீது மோதப் பார்த்தது.
அந்த மாது வழங்கிய காணொளி ஒன்று, அவர் கூறியதுபோல அவரின் டொயோட்டா பிரையஸ் காருக்கு முன்னால் இருந்த சிறியதோர் இடத்தில் அந்த கறுப்பு கார் நுழைய முற்பட்டதைக் காட்டியது.
தொடர்புடைய செய்திகள்
“இது மிகவும் ஆபத்தானது. எனவேதான், அந்த ஓட்டுநரை அணுகி, அவர் என்னதான் செய்ய முற்படுகிறார் எனக் கேட்க நான் காரிலிருந்து இறங்கினேன்,” என்று அந்த மாது நினைவுகூர்ந்தார்.
என்றாலும், காரிலிருந்து இறங்காத அந்த ஓட்டுநர், அந்த மாதை நோக்கி சற்று முன்னால் சென்ற பிறகே வழிவிட்டார்.
இந்நிலையில், தம் செயல்கள் ஆபத்தானது என்பது தமக்குத் தெரியும் என அந்த மாது சொன்னார். என்றாலும், தாங்கள் தடத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டதால் தாம் காரிலிருந்து இறங்கியதாக அவர் விளக்கமளித்தார்.
இச்சம்பவம் குறித்து தெளிவுபடுத்தி தம் மீது எந்தத் தவறுமில்லை என்பதை நிரூபிக்க அவர் விரும்புகிறார்.

