முன்னாள் கணவர் தவறாக அனுப்பிய பணத்தைத் திருப்பித் தர மறுத்த மாது

முன்னாள் கணவர் தவறாக அனுப்பிய பணத்தைத் திருப்பித் தர மறுத்த மாது

2 mins read
70461b42-2dfb-486c-ba2b-cec41926f02f
நீதிமன்றத்தின் நேரத்தை விரையமாக்கியதால் அந்த மாதுக்கு சட்ட செலவுகளுக்கானச் செலவை ஈடுசெய்யும்படி தீர்ப்பு விதிக்கப்பட்டது. - படம்: Alexstar - stock.adobe.com
Google News Preferred Icon

ஒரு நிதி நிறுவனத்துக்கு அனுப்பவேண்டிய $6,650 தொகையை 2025 டிசம்பர் 7ஆம் தேதி, முன்னாள் மனைவிக்கு தவறுதலாக அனுப்பிய ஜேம்ஸ் ஜோனதன் என்ற ஆடவர் அதனை எளிதில் திரும்பப்பெற முடியவில்லை.

‘வைஸ்’ என்ற பெயரில் இயங்கிய நிறுவனத்துக்கானப் பணத்தை, அந்த ஆடவர் ‘வைஃப்’ என்ற பெயரில் இருந்த கணக்குக்குத் தவறுதலாக அனுப்பிவிட்டார்.

அதற்குப்பிறகு ஆறு மாதங்களாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் முன்னாள் தம்பதியான அந்த ஆடவருக்கும் மாதுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, நீதிமன்றத்தின் உதவியை அவர்கள் நாடவேண்டி ஆயிற்று.

அவர்கள் இருவரும் 2021ல் மணவிலக்கு பெற்றுவிட்டனர். இருப்பினும் அவர்களின் பிள்ளையின் பராமரிப்பு விவகாரங்களுக்காகத் தொடர்பில் இருந்துள்ளனர்.

பணத்தை அனுப்பிய பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 7 முதல் 15ஆம் தேதிவரையில், 10 முறை ஜோனதன் அவரது முன்னாள் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பி, தொகையைத் திரும்பக் கேட்டார். ஆனால் அந்த மாது பதிலளிக்கவில்லை. வேறு வழியின்றி அவர் வழக்கறிஞர் வழியாக பணத்துக்கான கோரிக்கைக் கடிதத்தை அனுப்பியபிறகு, அந்த மாது அவரது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பினார்.

ஏடல் இங் என்ற அந்த மாது பணத்தை உடனடியாக முன்னாள் கணவருக்குத் திரும்பத் தராமல் வேண்டுமென்றே பல சிக்கல்களை ஏற்படுத்தியதோடு, தாம் மோசடிக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவதாக சந்தேகிப்பதாகவும், பணத்தை அனுப்பியவரின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமது பதிலை அவரது வழக்கறிஞர் கடிதத்தில் முன்வைத்தார்.

மேலும் தேவையின்றி அந்தப் பணத்தை காவல்துறைக்கு அனுப்பிவைத்தார். அதன்பிறகு இரு தரப்பும் ஒருவர்மீது ஒருவர் வழக்குகள் தொடுத்தனர்.

நீதிமன்ற துணைப் பதிவாளர் கருத்து

துணைப் பதிவாளர் மார்க் லிம் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) வெளியிட்ட தீர்ப்பில், அந்த மாதின் நடவடிக்கை முறையற்றது எனவும் தேவையில்லாமல் அந்தப் பிரச்சினையை நீடிக்கச் செய்ததாகவும் நீதிமன்றம் முடிவுசெய்து, சட்டச் செலவுகளுக்கான $6,500 தொகையை செலுத்தும்படி தீர்ப்பளித்தது. அதற்குப் பொருள் சேவை வரியையும் (ஜிஎஸ்டி) சேர்த்தால் மொத்தம் $7,000க்கும் மேல் ஆகிறது.

காவல்துறைக்கு அனுப்பப்பட்ட பணம் ஜோனதனுக்கு மீண்டும் வழங்கப்பட்டது.

தீர்ப்பின் விவரங்களை வெளியிட்ட திரு மார்க் லிம், தவறாக அனுப்பப்பட்டத் தொகையை முன்னாள் கணவருக்கு அந்த மாது விரைவாகத் திருப்பி அனுப்பியிருந்தால் அதைவிடக் கூடுதலான தொகையை அந்த மாது செலுத்தத் தேவையின்றி போயிருக்கும் என்று கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்
மணவிலக்குஆடவர்மாதுநீதிமன்றம்வழக்கறிஞர்தீர்ப்புசட்டம்அபராதம்பணம்கணக்குகள்