மாதை முகத்தில் குத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவருக்குப் பொது பாதுகாப்பைக் கருதி வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 22) பிணை மறுக்கப்பட்டது.
செங்காங் சென்ட்ரலில் இருக்கும் புளோக் ஒன்றில் அக்டோபர் 29ஆம் தேதி இரவு 9 மணியளவில் யாகுல்ட் (yakult) பானங்களை விற்ற திருவாட்டி ஓ சொக் ஹுவாவின் முகத்தில் 30 வயது லிம் சுவான் சும் குத்தியதாகக் கூறப்பட்டது.
இதனால், பலத்த காயமடைந்த திருவாட்டி ஓ, செங்காங் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் மாண்டார்.
மனநலப் பரிசோதனை மேற்கொள்வதற்காகவும் விசாரணை நடத்துவதற்காகவும் லிம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
அவரிடம் நடத்த வேண்டிய அனைத்து விசாரணைகளும் முடிவுற்ற நிலையில், லிம்மைப் பிணையில் விடுவிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் மறுப்புத் தெரிவித்தார்.
லிம்மின் மனநோய் மீண்டும் தலைதூக்க அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட அதிக வாய்ப்பிருப்பதாக அவர் வாதிட்டார்.
தடுப்புக்காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டால் அது பொதுமக்கள் பாதுகாப்புக்கு நல்லதன்று என அவர் கூறினார்.

