ஆட்சேர்ப்பு நிறுவன முதலாளியான மாது ஒருவர் தனது முன்னாள் காதலனைப் பிரச்சினையில் சிக்கவைப்பதற்காக, தனது நிர்வாக அதிகாரியிடம் அந்த ஆடவர் அவர்கள் இருவரையும் தாக்கியதாகப் பொய் சொல்லச் சொல்லியிருந்தார்.
அதை நம்பவைக்கும் பொருட்டு, காயம் ஏற்படும் அளவு தன்னைக் குத்தி உதைக்குமாறு மற்றோர் ஊழியரை அந்த மாது கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், 42 வயதான முன்னாள் காதலனிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றனர்.
நிர்வாக அதிகாரி நிக்கோல் செங் ஜின் வென், ‘ராஃபிள்ஸ் ஹியூமன் ரிசோர்ஸ்’ நிறுவனத்தை விட்டு விலகி, தான் கொடுத்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டதும் மாது கூறிய பொய் வெளிச்சத்துக்கு வந்தது.
இருப்பினும் காவல் அதிகாரியிடம் பொய்த் தகவல் கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக செங்கிற்கு ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது முன்னாள் முதலாளி சோஃபியா கில், 52, தொடர்பான வழக்கு தொடர்கிறது. கில்லை அடித்ததாகக் கூறப்படும் மற்றோர் ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்துத் தகவல் இல்லை.