திருமணம் செய்யாத இளம்பெண் ஒருவர் கருவுற்றதால் அதைக் கலைக்க முடிவெடுத்தார்.
கருவைக் கலைக்க இணையத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கினார் அந்தப் பெண். அந்த மாத்திரைகளைச் சாப்பிட்டப் பிறகு அந்தப் பெண் தன் வீட்டிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இருப்பினும், அந்தக் குழந்தை பிறந்த இரண்டு மணிநேரத்திலேயே இறந்தது. உடற்கூறாய்வில் பிள்ளையின் உடல் வளர்ச்சி 29 முதல் 33 வாரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் 2024ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நடந்தது. அப்போது அந்தப் பெண்ணுக்கு 23 வயது.
“சட்டப்படி கருக்கலைப்பு செய்வது அதிகச் செலவுகளை உண்டாக்கும், பெற்றோருக்குத் தெரிந்தால் பெரிய பிரச்சினை ஏற்படும் என்ற காரணங்களால் இந்த முடிவை எடுத்தேன்,” என்று அப்பெண் காவல்துறை விசாரித்தபோது கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிள்ளையின் இறப்புக்குக் காரணம் அவரது தாய் உண்ட கருக்கலைப்பு மாத்திரைகளாக இருக்கலாம் என்று தெரிவித்தார். குழந்தையின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.