உயிரை மாய்த்துக்கொள்ள முன்னாள் காதலருக்கு உதவிய பெண்

உயிரை மாய்த்துக்கொள்ள முன்னாள் காதலருக்கு உதவிய பெண்

2 mins read
a075256f-7a91-4913-9636-4bed3994c82a
42 வயது அல்வேர்னா ஷே ஷியூ பின் என்பவருக்குப் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உயிரை மாய்த்துக்கொள்ள தமது முன்னாள் காதலருக்கு உதவியதாகவும் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும் இறுதிச் சடங்கு சேவைகள் நிறுவனம் ஒன்றின் இயக்குநரான 42 வயது அல்வேர்னா ஷே ஷியூ பின் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வழக்கு கோரியிருந்தார்.

இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என செப்டம்பர் 13ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு மே 16ஆம் தேதியன்று உயிரை மாய்த்துக்கொள்ள 32 வயது திரு வீ ஜுன் சியாங்கிற்கு ஷே தெரிந்தே உதவியதாக மாவட்ட நீதிபதி ஷான் ஹோ கூறினார்.

புளோக் 145A பிடோக் ரெசர்வார் சாலையில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் திரு வீயின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

வாகன நிறுத்துமிடத்தில், கார் ஒன்றுக்குள் இருந்தவாறு உயிரை மாய்த்துக்கொள்ள திரு வீக்கு எவ்வாறு உதவினார் என்பது குறித்து ஷே காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்ததை நீதிபதி சுட்டினார்.

தாம் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் காருக்குள் இருந்த நைட்ரஜன் வாயு கலனின் விசையைத் திறந்துவிட்டதாகவும் ஷே தெரிவித்திருந்தார்.

திரு வீ கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நைட்ரஜன் வாயு காரிலிருந்து வெளியேறாமல் இருக்கப் பை ஒன்றை ஷே பயன்படுத்தினார்.

பிறகு, திரு வீயை அந்த காரில் விட்டுவிட்டு அங்கிருந்து ஷே கிளம்பிச் சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்தபோது திரு வீ இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயிரை மாய்த்துக்கொள்ளப் பயன்படுத்தப்பட்ட பையை வீசியதன் மூலம் ஆதாரத்தை ஷே சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தினார்.

இதன் மூலம் விசாரணைக்கு அவர் இடையூறு விளைவித்தார்.

சம்பவம் நிகழ்ந்ததற்கு இரண்டு வாரத்துக்கு முன்பு திரு வீக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருந்ததாகக் காவல்துறையிடம் ஷே பொய் கூறினார்.

ஷே $100,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 11ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரை மாய்த்துக்கொள்ள திரு வீக்கு உதவியதற்காக ஷேவுக்குப் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்