பீச் ரோட்டிலுள்ள கூட்டுரிமை வீட்டில் வாடகை தொடர்பான தகராற்றில் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற 39 வயதுப் பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 24) உயர் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
சீனக் குடியுரிமை பெற்ற லீ யே என்ற அப்பெண், 56 வயது லிம் லாய் குவானைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், அவருக்கு ஏற்பட்டிருந்த கடுமையான மனச்சோர்வு காரணமாகக் கொலைக் குற்றம், மரணத்தை விளைவித்த குற்றமாகக் குறைக்கப்பட்டது.
அக்குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் 2024 மே 8ஆம் தேதி அதிகாலை ‘சிட்டி கேட் ரெசிடன்சஸ்’ என்ற அந்தக் கூட்டுரிமை வீட்டில் நடந்தது.
இருவரும் பல ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டின் வாடகைத் தொகையைப் பகிர்ந்துகொள்வது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த லீ சமையலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து லிம்மின் மார்புப் பகுதியில் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த லிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு லீ சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டார்.

