இணையத்தில் வலம் வரும் பல மோசடிகள் குறித்து தமது நண்பர்களுக்கு அடிக்கடி நினைவூட்டும் 65 வயது மதிக்கத்தக்க கெல்லி (உண்மைப் பெயரன்று), மீன் தலைக்கு ஆசைப்பட்டு 33,000 வெள்ளியை இழந்துள்ளார்.
கடந்த மாதம் 5ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட மீன் தலை குழம்பு குறித்த விளம்பரத்தைப் பார்த்த கெல்லி, அதை உடனடியாக வாங்க விரும்பினார். அந்த விளம்பரத்தைத் தட்டிய அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
விளம்பரத்தை கெல்லி தட்டியவுடன் மோசடிக்காரர்கள் அவரிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு மீன் குறித்து பேசினர். அதன் பின்னர் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யச் சொன்னார்கள்.
செயலியைப் பதிவிறக்கம் செய்த பிறகு கெல்லியின் கைப்பேசியை மோசடிக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வேகமாகச் செயல்பட்ட மோசடிக்காரர்கள் கெல்லியின் வங்கிக் கணக்குகளில் இருந்து கிட்டத்தட்ட 33,000 வெள்ளி திருடினர்.
நல்லவேளையாக கெல்லி தமது ஓசிபிசி வங்கி கணக்கில் ‘மணி லாக்’ (money lock) என்னும் சேவையை பயன்படுத்தி இருந்தார். ‘மணி லாக்’ சேவை மூலம் வங்கிக் கணக்கில் உள்ள மற்ற தொகை பத்திரமாக இருந்தது.
அதன் பிறகு கெல்லி காவல்துறையில் புகார் கொடுத்தார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
‘மணி லாக்’ சேவைக்குக் கீழ் உள்ள பணத்தை வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று அல்லது தானியக்க வங்கி இயந்திரங்களில் (ATM) மட்டுமே எடுக்க முடியும்.

