பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடைமுறைகளைப் படம்பிடிக்கக்கூடாது என்று தெரிந்திருந்தும் அதைக் காணொளியாக சமூக ஊடகத்தில் பதிவுசெய்துள்ளார் ஒரு பெண்.
வாக்களிப்பு தினத்தன்று (மே 3) வாக்கைச் செலுத்தும் காணொளியை அந்தப் பெண் சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.
சீன மொழியில் பேசிய அந்தப் பெண், வாக்களிப்பு நடைமுறைகளைப் புகைப்படம் எடுப்பதற்கோ காணொளியாகப் பதிவு செய்வதற்கோ அனுமதி இல்லை என்றபோதும் ரகசியமாக அதைச் செய்வதாக அவர் பதிவிட்ட காணொளியில் கூறினார்.
காணொளியில் அந்தப் பெண் வாக்களிக்கச் சென்ற வாக்களிப்பு நிலையத்தையும் வாக்குச் சாவடியையும் பெண்ணின் வாக்குச்சீட்டையும் இரண்டு நொடிகளுக்குக் காண முடிந்தது.
அந்தப் பெண்ணின் வாக்குச்சீட்டில் அவர் செங்காங் குழுத்தொகுதியில் வாக்களிப்பதைக் குறிப்பிட்டிருந்தது.
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, வாக்காளர்கள் புகைப்படக் கருவிகளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. அங்கு தொலைபேசிகளையும் பயன்படுத்த அனுமதி இல்லை.
பெண்ணின் காணொளி குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக டிக்டாக் பயனர் ஒருவர் தெரிவித்தார்.

