ஓய்வுபெற்ற 67 வயது கிரேஸ் எனும் மாது, அதிகாரிகளைப்போல் நடித்து ஏமாற்றிய மோசடிக் கும்பலிடம் $1.19 மில்லியனை இழந்துவிட்டார்.
காவல்துறை அதிகாரி என்ற போர்வையில் தொலைபேசியில் அழைத்த மோசடிக்காரர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் $3 பில்லியன் மோசடியில் கிரேஸ் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் கூறினார்.
வங்கி அதிகாரி, அரசாங்க வழக்கறிஞர் என்றும் கூறிக்கொண்ட வேறு இருவரிடம் பேசிய பிறகு ‘விசாரணை’யில் உதவச் சம்மதித்தார் கிரேஸ்.
அவர்கள் கூறியபடி நடந்துகொண்டதால், மொத்தம் 1.19 மில்லியன் வெள்ளி அவர் தன் வங்கிக் கணக்கிலிருந்து மோசடிக் கும்பலுக்கு மாற்றப்பட்டுவிட்டது.
உண்மையான காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோதும் தான் இழந்த தொகையின் அளவைத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்று கூறுகிறார் கிரேஸ்.
நவம்பர் 28ஆம் தேதி, ஊடகத்தினரிடம் அவர் பேசினார்.
காவல்துறை அந்த நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தது. கிரேஸ் இழந்த தொகையின் அளவு அவருக்குத் தெரியாது என்றும் அவர் அதைத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றும் அதிகாரிகள் முன்னதாகவே செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தன் கணவருக்கோ குடும்பத்தினருக்கோ இதுகுறித்துத் தெரிவிக்கப் போவதில்லை என்றும் கிரேஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கிரேஸ் சீனாவிலுள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, கடந்த மே மாதம் 15ஆம் தேதி காலை, மோசடிக்காரர்கள் அவரைத் தொலைபேசியில் அழைத்தனர்.
இல்லாத ஒரு விசாரணைத் திட்டத்தின் பெயரில் அவரை ‘விசாரித்த’ பிறகு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பக் கூறினர்.
மறுநாள் சிங்கப்பூர் திரும்பிய கிரேஸ், ஒரு வாரம் கழித்துப் பலமுறை $90,001க்கும் $99,999க்கும் இடைப்பட்ட தொகையை மோசடிக் கும்பலுக்கு அனுப்பினார். ஒரு மாத காலத்தில் மொத்தம் $1.19 மில்லியனை அவர் அனுப்பினார்.
கிரேசின் கணக்கிலிருந்து பெருந்தொகைக்கான பணப்பரிமாற்றம் நடந்ததைக் கண்டதும் ஓசிபிசி வங்கியின் மோசடித் தடுப்புப் பிரிவு விசாரணை அதிகாரி போ லியோங் ஹுய்க்குச் சந்தேகம் ஏற்பட்டது.
காவல்துறையின் மூத்த விசாரணை அதிகாரி மேத்யூ லியிடம் அவர் தகவல் தெரிவித்த பிறகுதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
விடாப்பிடியாக மோசடிக்காரர்களின் வலையில் விழுவோரைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரிகள் தலையிட அதிகாரம் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தை ஆதரிப்பதாகக் கூறினார் கிரேஸ்.

