சாங்கி விமான நிலையத்தில் திருடிய பெண்ணுக்கு $750 அபராதம்

2 mins read
0665b406-c759-4f6f-aecb-f7704faa1bf7
சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் உள்ள ‘தி ஷில்லா’ கடையிலிருந்து வாசனைத் திரவத்தைத் திருடினார் ராஜ் வர்ஷா. - படம்: சாவ்பாவ்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாங்கி விமான நிலையத்தில் வாசனைத் திரவத்தைத் திருடிய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) $750 அபராதம் விதிக்கப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டை ஆஸ்திரேலியரான 35 வயது ராஜ் வர்ஷா ஒப்புக்கொண்டார்.

2023ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதியன்று சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் உள்ள ஒரு கடையிலிருந்து கிட்டத்தட்ட $250 மதிக்கத்தக்க ஷெனேல் வாசனைத் திரவத்தை வர்ஷா திருடினார்.

அதையடுத்து, அவர் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூர் திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வர்ஷாவைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

வாசனைத் திரவத்தை வர்ஷா திருடிய நாளன்று, அவர் தமது குடும்பத்தாருடன் ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிங்கப்பூர் வந்தடைந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் திரு ஸாக்கிர் உசேன் கூறினார்.

அதிகாலை 4.10 மணி அளவில் அவர் முனையம் ஒன்றில் உள்ள ‘தி ஷில்லா’ கடைக்குள் நுழைந்து வாசனைத் திரவப் புட்டியை எடுத்து தமது கைப்பைக்குள் ஒளித்துவைத்துக்கொண்டதாக திரு ஸாக்கிர் உசேன் தெரிவித்தார்.

வைத்த இடத்தில் அப்புட்டி இல்லை என்பதை பாதுகாப்பு அதிகாரி கண்டுபிடித்ததும் அந்தக் கடையிலிருந்து வர்ஷா உடனடியாகக் கிளம்பிச் சென்றதாகத் தெரிவக்கப்பட்டது.

அவர் அதற்கான பணத்தைச் செலுத்தவில்லை.

காலை 9.10 மணி அளவில் அவர் தமது குடும்பத்துடன் தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன.

இந்நிலையில் இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியன்று, இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு வந்த விமானத்தில் வர்ஷா பயணம் செய்தார்.

அவர் சிங்கப்பூர் திரும்பியதும் கைது செய்யப்பட்டார்.

வர்ஷா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அந்த வாசனைத் திரவத்தைத் தமது தாயாருக்குப் பரிசாகக் கொடுத்ததாக அவர் கூறினார்.

நீதிமன்றம் ஏ. சங்கீதா முன் நின்ற வர்ஷா கண்ணீர் விட்டு அழுததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரை வழக்கறிஞர்கள் யாரும் பிரதிநிதிக்கவில்லை.

செய்த தவற்றுக்கு முழு பொறுப்பு ஏற்பதாக வர்ஷா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்தபோது தாம் சரியான மனநிலையில் இல்லை என்றார் அவர்.

திருடிய வாசனைத் திரவத்துக்கான பணத்தை ‘தி ஷில்லா’ கடையிடம் வர்ஷா செலுத்திவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்