58 ஆண்டுகள் கழித்து தாய்-மகள் சந்திப்பு

58 ஆண்டுகள் கழித்து தாய்-மகள் சந்திப்பு

2 mins read
e7ed3466-773f-41e2-9cd1-f5cbde94e9f2
தெங் எக் கியவ் (முன்வரிசை, வலது) தன் புதல்வி ஹம்சியா முகம்மது, மகன்கள் லிங் கோக் ஹெங் (பின்வரிசை இடது), லிங் கோக் ஓங் ஆகியோர் கோலாலம்பூரில். படம்: ஜோசஃபின் இங் -

திருவாட்டி தெங் எக் கியவ் என்ற மாதுக்கு வயது இப்போது 90. அவரின் கணவரான லிங் எக் கூன் 1989ல் மாண்டுவிட்டார்.

இந்தத் தம்பதிக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். இந்தக் குடும்பம் முன்பு மலேசியாவில் திரங்கானுவில் புக்கிட் பெசி என்ற நகர் அருகே கிராமம் ஒன்றில் வசித்தது. பிறகு 1969ல் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தது.

அதற்கு முன்னதாக, 1964ஆம் ஆண்டில் பிரபலமான மலாய் குடும்பம் ஒன்று இடைவிடாமல் நச்சரித்ததால் திருவாட்டி தெங், தனது ஆறு பிள்ளைகளில் ஒரு மகளை அந்தக் குடும்பத்திற்குத் தத்து கொடுத்தார்.

பிறகு காலம் ஓடியது. திருவாட்டி தெங்கின் புதல்வரான லிங் கோக் ஓங், 66, என்பவரும் அவரின் மனைவியான ஜோசஃபின் இங், 62, என்பவரும் தத்து கொடுக்கப்பட்ட பெண்ணை மலேசியர் வரலாற்றுச் சங்கம் என்ற அமைப்பின் உதவியுடன் திரங்கானுவில் புக்கிட் பாயங்கில் செப்டம்பர் 4ஆம் தேதி சந்தித்தனர்.

ஹம்சியா முகம்மது என்ற அந்தப் பெண்மணி, இப்போது மலேசியாவில் புக்கிட் பாயாங்கில் தாமான் தாசெக்கில் காப்பிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

ஹம்சியா முகம்மதுவின் தாயாரான திருவாட்டி தெங்கும் ஹம்சியாவும் காணொளி வழி பேச அவ்விருவரும் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர்.

பிறகு டிசம்பர் 5ஆம் தேதி கோலாலம்பூரில் அனைவரும் சந்தித்தனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகளைச் சந்தித்து ஆனந்தக் கண்ணீர் விட்ட திருவாட்டி தெங், "என் மகள் அருமையான நல்ல ஒரு பெண்மணியாக வளர்ந்து இருக்கிறார்," என்று கூறினார்.

அந்தச் சந்திப்பில் ஹம்சியாவின் இரு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இதர உறவினர்களும் கலந்துகொண்டனர்.

ஹம்சியாவின் கணவர் காப்பிக் கடையைக் கவனித்துக்கொள்ள வேண்டி இருந்ததால் அப்போது அவர் வரவில்லை.

சீனப் புத்தாண்டிற்குப் பிறகு ஹம்சியா சிங்கப்பூருக்கு வருகை தர திட்டமிடுகிறார்.