முஸ்தஃபா சென்டர் அருகே பெண்ணைக் கட்டிப்போட்டு கொள்ளை; இந்தியர் இருவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
f40c2ae5-128f-476f-87f5-593ccb542bc6
ஜாலான் புசாரில் உள்ள அம்ரைஸ் ஹோட்டல் கிச்சனரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: அம்ரைஸ் ஹோட்டல் இணையப்பக்கம்

ஹோட்டல் அறையில் கடந்த வாரம் பெண் ஒருவரின் கை, கால்களைத் துணியால் கட்டிப்போட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும் இந்திய நாட்டவர்கள் இருவர்மீது திங்கட்கிழமை (ஏப்ரல் 28) குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆரோக்கியசாமி டைசன், 22, ராஜேந்திரன் மயிலரசன், 28, இருவர்மீதும் தலா ஒரு கொள்ளைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மத்திய காவல்துறைப் பிரிவில் விசாரணைக்காவலில் அவர்களை வைக்க உத்தரவிடப்பட்டது.

ஜாலான் புசாரில் உள்ள அம்ரைஸ் ஹோட்டல் கிச்சனரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அவ்விருவரும் அறையில் இருந்தனர். அப்போது அந்த 38 வயது பெண்ணின் கை, கால்களை அவர்கள் கட்டிப்போட்டதாகக் கூறப்படுகிறது.

அப்பெண்ணின் கன்னத்தில் அறைந்ததாகவும் பின்னர் அவருடைய கடப்பிதழ், வங்கி அட்டைகள், $2,000 ரொக்கம் உள்ளிட்ட உடைமைகளுடன் தப்பிச்சென்றதாகவும் அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை இரவு 9 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

காவல்துறை கண்காணிப்புக் கருவிகள், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், மத்திய காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவர்களின் அடையாளத்தை உறுதிசெய்தனர். புகார் அளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

அப்பெண்ணின் உடைமைகள் அனைத்தும் மீட்கப்பட்டதாகக் காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவர்களின் வழக்கு மே 5ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.

காயம் ஏற்படுத்தி கொள்ளையடித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்