சிங்கப்பூரில் 1,300க்கும் அதிகமான மாத்திரைகளில் கிட்டத்தட்ட 27 கிலோகிராம் கொக்கைன் போதைப் பொருளுடன் பிடிபட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பெண்கள் ஐவர் மீது வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மரண தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவற்றில் சில மாத்திரைகள் பொம்மைகளில் மறைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் ஹாங்காங் காவல்துறையின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் இடையில் பரிமாறப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் ஜூலை 29ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் அந்தப் பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் ஹாங்காங்கைச் சேர்ந்த 21 வயது சுங் கா இயு.
27 வயது ஃபைத் அவினோ ஔமா, 27 வயது ஜெனெடிரிக்ஸ் அட்சியெனொ ஜுமா, 30 வயது ஜாய்ஸ் ஜெரி எம்புரு, 32 மார்கரெட் கவிரா முங்கை ஆகிய நால்வரும் கென்யாவைச் சேர்ந்தவர்கள்.
சுங்கும் முங்கையும் கிட்டத்தட்ட 6 கிலோகிராம் எடையுள்ள கொக்கைன் போதைப் பொருளை 289 மாத்திரைகளில் கடத்த முற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
முங்கை அந்த மாத்திரைகளைச் சுங்கிடம் கொடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இதர மூன்று பெண்கள் போதைப் பொருள்கள் கொண்ட 275 முதல் 380 மாத்திரைகளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் ஒவ்வொருவர் மீதான வழக்கும் 5.9 கிலோகிராமுக்கும் 7.9 கிலோகிராமுக்கும் இடைப்பட்ட கொக்கைனுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
சுங், முங்கை, ஔமா, எம்புரு ஆகியோரின் வழக்குகள் இம்மாதம் 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும். ஜுமாவின் வழக்கு 28ஆம் தேதி விசாரிக்கப்படும்.
பெண்களில் இருவர் பொம்மைகள் அடங்கிய பயணப் பெட்டிகளைக் கைமாற்றியபோது கைதுசெய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, ஜூலை 31ஆம் தேதி தெரிவித்தது.
பின்னர் கொக்கைன் இருந்தது கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் 30 கிராமுக்கும் அதிகமான கொக்கைன் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.