பெண்கள் முன்னேறும்போது குடும்பங்கள் வலுவடைகின்றன, சமூகம் உறுதியாகிறது, பொருளியல் வளமடைகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைவருமான குமாரி இந்திராணி, சனிக்கிழமை (மே 31) சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி நிலையத்தில் இடம்பெற்ற பெண்களின் உயர்வுக்கான ‘ஷைன்ஸ்பையர்’ (Shinespire 2025) எனும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இரண்டாம் முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிண்டாவின் ‘லெட் ஹர் ஷைன்!’ என்ற பெண்களுக்கான முதன்மைத் திட்டத்தின் ஓர் அங்கமாகும். ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்திட்டம், ஏழு முதல் 35 வயதுக்கு உட்பட்ட இந்தியப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் செயல்படுகிறது.
வழிகாட்டுதல், திறன் வளர்ப்பு, பயிலரங்குகள் போன்ற ஆதரவுத் திட்டங்கள் மூலம் பெண்கள் தங்கள் குறிக்கோளை அடைய இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு ‘ஒன்றிணைந்து நமது சிங்கப்பூரை உருவாக்குவோம்’ (Building Our Singapore Together) என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் முத்தாய்ப்பு உரையை ஆற்றிய அமைச்சர் இந்திராணி, பெண்களின் முன்னேற்றம் சமூகத்திற்குப் பரந்த நன்மைகள் தருவதை வலியுறுத்தினார்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள், பெற்றோர் விடுப்பு மேம்பாடு, மாதர் சாசனத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட சிங்கப்பூரின் பல முக்கிய கொள்கைகள் பெண்களுக்கு சமத்துவமான சூழலை உருவாக்கும் தேசிய அர்ப்பணிப்பைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படும் பெண்கள் ஒரு வலுவான சமூகத்தையும் அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரையும் உருவாக்க உதவுவதாக அமைச்சர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுகையில், “அவர்களின் வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இன்று பலர் புதிதாகத் தொடங்கிய நிறுவனங்களையும் தங்கள் சொந்த வர்த்தகங்களையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சிலர் வீட்டிலிருந்தே தங்களின் விருப்பமான பொழுதுபோக்கை வெற்றிகரமான வர்த்தகமாக மாற்றியுள்ளனர்,” என்றார் அவர்.
வெற்றி என்பது பணத்தால் மட்டுமல்லாமல், நோக்கத்தாலும் அது ஏற்படுத்தும் தாக்கத்தாலும் அளவிடப்படுகிறது என்பதைப் பலரும் உணர்ந்து, அதன்படி செயல்படுகிறார்கள் என்று குமாரி இந்திராணி கூறினார்.
எஸ்ஜி60யின் மூன்று தூண்களான ‘அக்கறை கொள்ளுங்கள், இணையுங்கள், பங்காற்றுங்கள்’ ஆகியவற்றை மையமாகக் கொண்டு நான்கு குழுக் கலந்துரையாடல்களும், ஆறு தலைப்புரைகளும் இந்த மாநாட்டில் நடைபெற்றன.
வெவ்வேறு துறைகளில் தலைசிறந்த பெண் வல்லுநர்கள் மொத்தம் 24 பேர் மாநாட்டில் உரையாடினர். தனிப்பட்ட அழுத்தத்தை நிர்வகித்தல், மனநலனை மேம்படுத்துதல், சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தெடுத்தல் போன்ற பலதரப்பட்ட தலைப்புகளையொட்டி அவர்கள் பேசினார்கள்.
“இன்றைய மாநாட்டில் கலந்துகொண்ட ஒவ்வொரு பெண்ணும் தனது கனவுகளை அடைய சிங்கப்பூரில் வழியுண்டு என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன். அவர்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் உறுதியான ஆதரவு கிடைக்கும். பாதை கடினமாக இருந்தாலும், அதை அவர்கள் என்றும் தனியாகக் கடக்க வேண்டியதில்லை,” என்றார் அமைச்சர் இந்திராணி.
‘லெட் ஹர் ஷைன்!’ திட்டம் பல பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருவதாக 24 வயதுப் பொறியாளர் சாஷ்டிகா மோஹன் கூறினார்.
“இந்தத் திட்டத்தின் மூலம் புதிய திறன்களை வளர்த்துக்கொண்டதுடன், முன்மாதிரிப் பெண்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றேன். இந்த அனுபவங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் ஊக்கமளிக்கின்றன,” என்றார் சாஷ்டிகா.
தன்னுரிமைத் தொழில்புரிபவரும் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயுமான கவிதா தர்மராசு, 50, சிண்டாவின் இணையத்தளத்தில் இந்த மாநாடு பற்றித் தெரிந்துகொண்டதாகக் கூறினார்.
“சில நேரங்களில், சரியான வழி அல்லது சரியான நேரத்தை எதிர்பார்த்து நாம் பின்தங்கியிருப்போம். இதன் தொடர்பாக உரையாளர் ஒருவர் இன்று பேசியது என்னை மிகவும் கவர்ந்தது. அளவுக்கு அதிகமாகச் சிந்திப்பதைத் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற மனவுறுதியை இங்குப் பெற்றுள்ளேன்,” என்றார் அவர்.