தங்கள் மனைவிகளைப் போதை மயக்கத்தில் ஆழ்த்த மற்றவர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டிய கணவர்களால் பாதிக்கப்பட்ட நால்வரில் ஏனியும் (உண்மைப் பெயரன்று) ஒருவர்.
அப்பெண்கள் சுயநினைவின்றி இருந்தபோது அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
2008ல் ஏனி திருமணம் புரிந்து பின்னர் மனமுறிவு செய்துகொண்ட அந்த ஆடவர், கூட்டுச் சதியில் சம்பந்தப்பட்டதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எழுவரில் ஒருவர்.
ஊடகங்களால் ‘ஜே’ என்று அழைக்கப்படும் ஏனியின் முன்னாள் கணவர், ஆக அதிகமான பாலியல் வன்கொடுமைகளை ஒருங்கிணைத்தார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களிலேயே ஜேவுக்குதான் ஆகக் கடுமையான தண்டனையாக 29 ஆண்டுச் சிறையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
நான்கு பிள்ளைகளுக்குத் தாயாரான ஏனி, ஜே தண்டனைக் குறைப்புக்கு முறையிட்ட பிறகு 2024ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சை தொடர்புகொண்டு தமது கதையை மற்றவர்களிடம் சொல்ல விரும்பினார்.
2025 மே மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இரண்டாவது முறையாக ஏனியைச் சந்தித்தது. அப்போது அனைத்துக் குற்றவியல் வழக்குகளும் நிறைவுற்றதோடு அவரது மனமுறிவு இறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
“அவமானத்தை எதிர்கொள்ள முடியுமா என்பது பற்றி உறுதியாகத் தெரியாததால், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசுவது குறித்து தொடக்கத்தில் எனக்குச் சற்றுக் கவலையாக இருந்தது. எனினும், இதுபோன்ற விஷயம் உண்மையிலேயே நடக்கிறது என்பதைப் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினேன்,” என்றார் ஏனி.
தொடர்புடைய செய்திகள்
தம்மீது மற்றவர்களுக்குப் பலவித அபிப்ராயம் ஏற்படலாம் எனத் தெரிந்தபோதிலும் தமது கதையைச் சொல்வதில் ஏனி உறுதியுடன் இருந்தார்.
“உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள பலரும் விரும்புகின்றனர் என்பது எனக்குத் தெரியும். எனவே, குழப்பத்தைத் தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்,” என்றார் 40களில் உள்ள ஏனி.
இந்த விவகாரத்தைக் கடந்து தம் வாழ்க்கைப் பாதையில் செல்ல ஏனி எண்ணம் கொண்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களை அவர் தொடர்புகொள்ளவில்லை. இருந்தாலும் கணவர், மனைவிகளுக்கு இடையே நிலவும் விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச மற்ற தம்பதிகளுக்கு தமது கதை ஊக்கமளிக்கும் என ஏனி நம்புகிறார்.
“அனைத்துப் பெண்களும் முன்வந்து பேச வேண்டும் என்பதே எனது அறிவுரை. அமைதியாக இருந்து அவதியுறாதீர். என்னைப்போல இருக்காதீர்,” என்றார் அவர்.

