நவீன சுகாதார அமைப்புகள், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதிலிருந்து சுகாதார முறையில் நீண்ட ஆயுள் வழங்கப்படுவதை நோக்கி நகர்வதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
ஆண்கள் எதிர்கொள்வதைவிட பெண்கள் அதிக உடல்சார் தடைகளையும் சுகாதார பாதிப்புகளையும் எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை (அக்டோபர் 8) மில்கன் பொருளியல் கொள்கை ஆய்வு நிறுவனம் நடத்திய ஆசிய உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய, சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங், “மக்கள் நீண்ட காலம் வாழ்வது என்பது, உயிர் பிழைத்திருப்பதைவிட சிறப்பாக வாழ்வதைப் பற்றியதாகவே மாறுகிறது,” என்றார்.
“சாதாரணமாக வாழும் காலத்திற்கும் நல்ல சுகாதாரத்துடன் வாழும் காலத்திற்கும் இடையிலான வெளியைக் குறைப்பதுவே உண்மையில் நீண்ட காலம் வாழ்வதாகப் பொருள்.
“அந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளி, இயன்றவரை குறைவாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
“சிங்கப்பூரில் அந்த இடைவெளி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். பெண்களுக்கு அது 12 ஆண்டுகளாகவும் ஆண்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் சற்று குறைவாகவும் உள்ளது.
“சிங்கப்பூரில் ஆண்களைவிட பெண்கள் சராசரியாக நாலரை ஆண்டுகள் அதிகமாக வாழ்ந்தாலும், அதில் பாதி காலம் உடல்நலக் குறைவுடனேயே கழிகிறது,” என்று திரு ஓங் தமது உரையில் குறிப்பிட்டார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற, சுகாதாரத்தின் வருங்காலம் தொடர்பான கலந்துரையாடலில் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஜில் பைடனுடன் பெண்களின் சுகாதாரம் குறித்து அமைச்சர் ஓங் உரையாடினார்.
மில்கன் பொருளியல் கொள்கை ஆய்வு நிறுவனத்திற்குட்பட்ட மகளிர் சுகாதார அமைப்பின் தலைவராகவும் திருவாட்டி ஜில் பைடன் உள்ளார்.
சுகாதாரம் தொடர்பான ஆசிய உச்சநிலை மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தும் மில்கன் ஆய்வு நிறுவனம் லாப நோக்கற்ற, சார்பற்ற அமெரிக்க ஆய்வு அமைப்பாகும்.
13வது ஆண்டாக நடத்தப்படும் உச்சநிலை மாநாடு, ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் புதன்கிழமை (அக்டோபர் 7) தொடங்கியது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) வரை தொடரும் மாநாட்டில் வணிகம், நிதி, அரசாங்கம், தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மூன்று நாள் மாநாட்டில் ஏறக்குறைய 50 நாடுகளைச் சேர்ந்த 1,500 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
