மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஏற்பட்டுள்ள அண்மைய ஆழ்குழிச் சம்பவங்களால், திரு ஸாஹிர் அங்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் கேள்விக்குறியானது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 29 வயதான அவர் ஏற்கெனவே விமானப் பயணச்சீட்டுகளை வாங்கியிருப்பதாலும், நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்லவிருப்பதாலும் தம்மால் பயணத்தைத் தவிர்க்கமுடியாது என்று கூறினார்.
அந்நிகழ்ச்சி சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறுகிறது என்றபோதும், பொருள்கள் வாங்குவதற்காக கோலாலம்பூர் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் திரு ஸாஹிர் கூறினார்.
அவர் செல்லவிருக்கும் இடங்களில் ஒன்று மஸ்ஜித் இந்தியா சாலை. கடந்த வாரம் அந்தப் பகுதியில் பெண் ஒருவர் ஆழ்குழியில் விழுந்து காணாமல்போனார்.
திருவாட்டி விஜயலட்சுமி என்று அடையாளம் காணப்பட்ட அந்த 48 வயது பெண், சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது எட்டு மீட்டர் ஆழமுள்ள குழிக்குள் விழுந்து மாயமானார்.
“ஒரு குழியாக இருந்தால் நாம் கவலைப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் மிகக் குறுகிய காலத்தில் அருகருகே இரண்டு குழிகள் ஏற்பட்டதால், பெரிய பாதுகாப்புப் பிரச்சினை உள்ளதாகத் தெரிகிறது,” என்று திரு ஸாஹிர் கூறினார்.
“இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அநேகமாக அந்தப் பகுதியை நாங்கள் தவிர்த்திடுவோம்,” என்றார் அவர்.
இந்நிலையில், மற்றொரு பயணியான திரு சையத் நசீர் அதன் தொடர்பில் கவலை தெரிவித்தார். பூன் லே கடைத்தொகுதிக்கு அருகில் கோலாலம்பூர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தபோது அவரிடம் ‘சிஎன்ஏ’ பேசியது.
தொடர்புடைய செய்திகள்
ஓய்வுபெற்ற அவர் தமது குடும்பத்தாரைச் சந்திக்க கோலாலம்பூருக்குச் செல்கிறார். அவரது குடும்பத்தினர் முன்கூட்டியே கோலாலம்பூருக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் பினாங்கிற்குச் செல்லவிருக்கிறார்கள்.
குழிகள் சம்பவத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “எனக்குக் கவலையாக உள்ளது. அதனால், அந்தப் பகுதிகளைத் தவிர்த்துவிடுவேன்,” என்றார் திரு சையத்.
அண்மைய சம்பவங்கள் நடந்துள்ளபோதும் திரு ஸாஹிர், திரு சையத் ஆகியோரைப் போலவே, சிங்கப்பூரிலிருந்து பலர் கோலாலம்பூருக்குத் தொடர்ந்து செல்கின்றனர்.
‘சிஎன்ஏ’ சந்தித்த இரண்டு பேருந்து நிறுவனங்கள், இதுவரை யாரும் பயணங்களை ரத்துசெய்யவில்லை என்று தெரிவித்துள்ளன.