உட்லண்ட்ஸ் விபத்து: மருத்துவமனையில் மோட்டார் சைக்கிளோட்டி

1 mins read
1f6a030e-90ed-4f9d-8c50-ad8d342a17f2
இணையத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படத்தில் சாலை அருகே ஒருவர் கிடப்பதைப் பார்க்கமுடிகிறது. மஞ்சள் நிறச் சட்டையுடன் இருப்பவர் லாரி ஓட்டுநர் என்று நம்பப்படுகிறது. - படம்: SCREENGRABS FROM JIMME CHEONG/BOTH CHECKPOINT FACEBOOK GROUP

உட்லண்ட்ஸ் சென்டர் ரோட்டில் சனிக்கிழமை (டிசம்பர் 6) காலையில் கனரக லாரி வாகனமும் மோட்டார்சைக்கிளும் விபத்துக்குள்ளாகின.

அதில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அன்று காலை 8.20 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக தெரிவித்தது. உட்லண்ட்சில் உள்ள சுகாதார வளாகத்துக்கு (உட்லண்ட்ஸ் ஹெல்த் ஹப்) காயமடைந்த 25 வயது ஆடவர் சென்றதை காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் கூட்டாக உறுதிசெய்துள்ளன.

காவல்துறை விசாரணை தொடர்கிறது. ஃபேஸ்புக் ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில், இரண்டு சாலைத் தடங்களுக்கு இடையில் போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் மோட்டார்சைக்கிளோட்டி தலைக்கவசத்துடன் படுத்திருப்பதும், சில உடைந்த பாகங்கள் சாலையில் சிதறிக் கிடப்பதையும் காணமுடிந்தது. அவருக்கு ஒருவர் உதவிசெய்வதும் தெரிகிறது.

கேகேஎல் நிறுவனத்தின் பெயருடைய (KKL) மஞ்சள் சட்டையுடன் லாரி ஒட்டுநர் என்று நம்பப்படுபவர் கைப்பேசியில் உரையாடியபடி சாலை அருகே நின்றுகொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது. விபத்துக்குள்ளான லாரி சாலை நடுவே உள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளது. சாலைப் பணிகள், கட்டுமான கழிவுகள், கனரக வாகனச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் லாரி விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு 2,960 மோட்டார்சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகின. இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 7.8 விழுக்காடு அதிகரித்து 3,191 விபத்துகள் பதிவாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்