உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் தற்காலிக முடக்கத்தை ஏற்படுத்திய ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூரைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (ஜூன் 4) காலை 9.42 மணிக்குச் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான மோட்டார்சைக்கிள் தடத்தில் அந்த ஆடவர் போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் நடந்து செல்வதைத் துணைக் காவல்படை அதிகாரி கவனித்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட ஆடவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டது. விசாரணையில் அவர், தனது ரொக்க அட்டையைத் தவறவிட்டதாகக் கூறினார். அந்த ஆடவரின் மோட்டார்சைக்கிளை அதிகாரி தேட முயன்றபோது, அவர் மலேசியாவை நோக்கி ஓடத் தொடங்கினார்.
நிற்கும்படி அதிகாரி கூறியதை அந்த ஆடவர் பொருட்படுத்தவில்லை.
“இந்தச் சம்பவத்தையடுத்து ஆணைய அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டனர். எங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக, சோதனைச்சாவடியை முடக்கும் நடவடிக்கையைத் தொடங்கினர்,” என்று ஆணையம் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட ஆடவரைப் பின்னர் ஆணையத்தின் அமலாக்கப் பிரிவு விசாரித்து வருவதாக ஆணையம் கூறியது.
மேலும், சிங்கப்பூருக்குள் நுழையும் எண்ணமே தனக்கு இல்லை என்று அந்த ஆடவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளின் கட்டளையைப் பின்பற்றத் தவறியதற்காகவும் அவர்கள் தங்கள் கடமையைச் செய்வதைத் தடுத்ததற்காகவும் அந்த ஆடவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குடிநுழைவுச் சட்டத்தின்கீழ், குடிநுழைவு அதிகாரியின் பணியில் இடையூறு விளைவித்த குற்றத்திற்காக $4,000 வரையிலான அபராதம், 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

