உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே சனிக்கிழமை (மே 24) காலை ஒரு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தால் சாலையின் ஒரு தடம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மூடப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
விபத்து குறித்து தங்களுக்குக் காலை 5.30 மணிக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரில் இருந்த 48 வயது ஆண் ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்த மூன்று பயணிகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் மற்ற இருவர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நால்வரும் சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. காணொளியில் விபத்து நடந்த இடத்தில் மூன்று அவசர உதவி வாகனம், இரண்டு குடிமைத் தற்காப்புப் படை வாகனம் ஆகியவற்றுடன் மீட்புப் படை அதிகாரிகள் காணப்பட்டனர்.
காலை 9.09 மணிக்கு மலேசியா நோக்கிச் செல்லும் சாலையின் மூன்று தடங்களும் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டன.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.