ஐந்து மடங்கு பெரிதாகிறது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி

2 mins read
3d7b7b3a-b24a-42a5-824a-5f1c4d56845c
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வடக்கு நுழைவாயிலான உட்லண்ட்ஸை பொலிவூட்டம் திட்டங்களை பிரதமர் லாரன்ஸ் வோங் விவரித்தார்.

அண்மையில், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் பார்வையிட்டேன்.

இருதரப்பும் வளர்ச்சி காணவும் வளங்களைப் பயன்படுத்தவும் பேராற்றலைக் கொண்டுள்ளது அந்தப் பொருளியல் மண்டலம். அதனை அதிகரிக்க, எல்லை தாண்டிய போக்குவரத்துத் தொடர்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் சிங்கப்பூருக்கு உள்ளது.

நமக்கு உள்ள நிலப்பகுதிகளையும் சுற்றுச்சூழல்களையும் பொக்கிஷங்களாகக் கருதி அவற்றை நமக்காகப் பயன்படுத்த வேண்டி உள்ளது.

பருவநிலை மாற்றம், கடல்நீர் மட்டம் உயர்வு ஆகியவற்றில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

புலாவ் தெக்கோங்கில் தாழ்வான நிலப்பகுதியை மீட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு அதில் கட்டுமானத்தைத் தொடங்கிவிட்டோம்.

கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் பிற்பாதியில் நிறைவுற்ற பின்னர் சிங்கப்பூர் ஆயுதப் படை பயிற்சிக்கான புதிய இடம் கிடைக்கும். அந்த இடம் தோ பாயோ நகரத்தைப் போல இருமடங்கு.

அது வெறும் நிலப்பகுதி மட்டுமல்ல, கடல்நீர் மட்ட உயர்வுக்கு எதிரான பாதுகாப்பு அரணும் ஆகும்.

தீவைச் சுற்றிலும் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறோம். 

தென்கிழக்கு கடலோர வட்டாரத்திற்கான ‘நீண்ட தீவு’ திட்டம் ஒன்றைத் தீட்டி உள்ளோம். கூடுதல் நிலப்பகுதிகளை மீட்க உள்ளோம்.

வருங்காலத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நாம் விரிவாக்குவோம். தற்போது உள்ள அளவைக் காட்டிலும் கிட்டதட்ட ஐந்து மடங்குப் பெரிதாக அந்தச் சோதனைச்சாவடி மாற்றம் காணும்.

அவ்வாறு விரிவாக்கம் செய்வதால் சிங்கப்பூருக்குள் நுழைவதும் வெளியேறுவதும்  சுலபமாகிவிடும். குடிநுழைவு அனுமதிக்கான காத்திருப்பு நேரம் குறையும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

இதனுடன், அடுத்த ஆண்டு ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் போக்குவரத்தும் (ஆர்டிஎஸ் லிங்க்) தொடங்க உள்ளது. சிங்கப்பூருக்கான ஆர்டிஎஸ் லிங்க் நிலையம் உட்லண்ட்ஸில் அமையும். அது தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்துடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும்.

அதன் பின்னர், எல்லைதாண்டிய பயணம் மிகவும் எளிதாகிவிடும். ஆர்டிஎஸ் ரயிலுக்கும் நமது எம்ஆர்டி ரயிலுக்கும் இடையில் தடையற்ற பயண மாறுதல் அமையும்.

சிங்கப்பூரில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் பயணத்தைத் தொடங்கும்போது குடிநுழைவு அனுமதி பெற்றால் போதுமானது. பயணத்தை முடிக்கும்போது வரிசையில் காத்திருக்கும் நிலை அதன்பிறகு இருக்காது.

ஆர்டிஎஸ் லிங்க் நிலையத்தைச் சுற்றிலும் நீக்குப்போக்கான தொழிற்கூடங்களைக் கட்டுவோம். 

இவை எல்லாம், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் முழுப் பயனையும் அனுபவிக்க விரும்பும் வர்த்தகங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

வடக்கு வட்டாரத்தில் புதிய வீடுகளுக்கான இடங்கள் நிறைய இருக்கும். 

‘ஹவுசிங் பை த உட்ஸ்’ என்னும் புதிய திட்டத்தின்கீழ் அட்மிரல்டி பார்க் அருகே ஏறத்தாழ 4,000 வீவக வீடுகளைக் கட்ட உள்ளோம். இதுபோன்ற மேம்பாடுகளால் உட்லண்ட்ஸ் வட்டாரம் மறுவடிவம் காண்பதோடு நவீன, துடிப்புமிக்க வட்டார மையமாக உறுமாறும்.

குறிப்புச் சொற்கள்