தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி மேம்பாட்டுப் பணி விரைவில் தொடங்கும்

2 mins read
9ffc77ed-f9ea-432a-92c9-66c555b5c51d
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை விரிவுபடுத்துவதன் மூலம் வாகன நெரிசல் குறையும் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையமும் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்தன. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் குடிநுழைவு, சோதனைச்சாவடி அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மறுசீரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்படவிருக்கிறது.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கவிருக்கின்றன.

இணைப்புப் பாலங்களில் ஏற்படும் கடுமையான வாகன நெரிசல்களுக்கு அது ஒரு நீண்டகால தீராக இருக்கும் என்றும் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையமும் ஜூன் 4ஆம் தேதி கூட்டறிக்கையை வெளியிட்டன.

முதற்கட்ட மறுசீரமைப்புப் பணியில் உட்லண்ட்ஸ் குடிநுழைவுச் சோதனைச்சாவடி பழைய உட்லண்ட்ஸ் நகர மையம் வரை நீட்டிக்கப்படும்.

“அந்த நீட்டிக்கப்பட்ட பகுதியில் சரக்கு வாகனங்கள், சிங்கப்பூருக்குள் நுழையும் கார்கள், மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான புதிய தானியக்க சோதனைத் தடம் அமைக்கப்பட்டிருக்கும்,” என்று ஆணையங்கள் கூறின.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகளிலிருந்து வெளியேறும் வாகனங்கள் நேரடியாக விரைவுச்சாலைக்குச் செல்ல புக்கிட் தீமா பெருவிரைவுச் சாலையும் விரிவுபடுத்தப்படும். அதன்வழி உச்ச நேரங்களில் ஏற்படும் சாலை நெரிசலைக் குறைக்கமுடியும்.

 உட்லண்ட்ஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடி.
உட்லண்ட்ஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடி. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

2023ஆம் ஆண்டு உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை ஏறக்குறைய 269,000 பேர் கடந்து சென்றனர். கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 22 விழுக்காடு அதிகரித்தது. ஏறக்குறைய 327,000 பயணிகளை அச்சோதனைச்சாவடி கையாண்டது.

கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி விடுமுறைக் காலத்தின்போதும் டிசம்பர் 20ஆம் தேதி சாதனை அளவாகக் கிட்டத்தட்ட 376,000 பயணிகள் அச்சோதனைச்சாவடியைக் கடந்தனர்.

2050ஆம் ஆண்டுக்குள் நாள் ஒன்றுக்குச் சோதனைச்சாவடியைத் தாண்டிச் செல்வோர் எண்ணிக்கை சராசரியாக 400,000ஐ எட்டும் என்று கணிக்கப்படுகிறது.

மறுசீரமைப்புத் திட்டத்திற்காக சிங்கப்பூர் அரசாங்கம், மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான கிட்டத்தட்ட 0.79 ஹெக்டர் பரப்பளவு உள்ள நிலத்தை வாங்கவிருக்கிறது.

அதுகுறித்து 2022 மே மாதத்திலும் 2023 நவம்பர் மாதத்திலும் சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவுக்கு எழுத்துபூர்வ அறிக்கை அனுப்பியது.

விரிவுபடுத்தப்படும் சோதனைச் சாவடியில் புதிய தானியக்கச் சோதனைத் தடங்கள் அமைக்கப்படும்.
விரிவுபடுத்தப்படும் சோதனைச் சாவடியில் புதிய தானியக்கச் சோதனைத் தடங்கள் அமைக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மறுமேம்பாட்டுப் பணிகள் இடம்பெறும் பகுதியின் நடுவே அமைந்துள்ள அந்த நிலப்பகுதி தற்போது பயன்பாடின்றி உள்ளதாகக் கூட்டறிக்கை தெரிவித்தது.

“நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பில் சிங்கப்பூர் நில ஆணையமும் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் மலேசிய அரசாங்கத்துடன் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது,” என்றும் அவ்வறிக்கை கூறியது.

அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் அனுமதித் தடங்களை அமைப்பது, இப்போதுள்ள சோதனைச்சாவடியை மறுசீரமைப்பது உள்ளிட்ட பணிகள் இடம்பெறும்.

“மறுசீரமைக்கப்பட்ட உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியானது கடற்பாலத்தைக் கடக்கும் பயணிகளின் குடிநுழைவு அனுமதி அனுபவத்தை மேம்படுத்தும்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்