மூவாண்டுக் காலப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு, விரிவுபடுத்தப்பட்ட வசதிகளுடனும் புதிய திட்டங்களுடனுமான சமூக மன்றத்தை உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்கள் இனி எதிர்பார்க்கலாம்.
அதில் பல்வேறு வகையான உடற்பயிற்சித் திட்டங்கள், ஒளிபரப்பு, இசைப் பயிற்சிக் கூடம், அதிகமான சமையற்கூடங்களுடனான புதுப்பிக்கப்பட்ட சமையலறை உள்ளிட்டவை அடங்கும்.
அந்தச் சமூக மன்றம் புதுப்பிப்புப் பணிகளுக்காக 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூடப்பட்டது.
உட்லண்ட்ஸ் சமூக மன்றம் மீண்டும் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், புதுப்பிக்கப்பட்ட அதன் புதிய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 2,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள், குடியிருப்பாளர்கள், நன்கொடையாளர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘உட்லண்ட்ஸ் கேலக்ஸி’ சமூக மன்றத்திலிருந்து புதிய வளாகத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்துடன் அந்த நிகழ்ச்சி தொடங்கியது.
அதில் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங், உட்லண்ட்ஸ் தொகுதியை மேற்பார்வையிடும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய சமூக மன்றம் சமூகப் பிணைப்பு, மரபு, கலாசாரம், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை போன்ற பல அம்சங்களுக்கான நடுவமாகச் செயல்படும் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி மரியம், அங்குள்ள வசதிகள் சில, குடியிருப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறினார்.
அதோடு, அங்குள்ள மலாய்/முஸ்லிம் சமூகம் உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சமூக மன்றத்தில் உடற்பயிற்சி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் திருவாட்டி மரியம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது, திரு ஓங்கிற்கும் திருவாட்டி மரியமுக்கும் புதிய வளாகம் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, அது பற்றி விளக்கமும் அளிக்கப்பட்டது.
அந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கட்டடத்தின் நான்கு தளங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட இருவழித்தொடர்பு நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர்.

