தமது கர்ப்பிணி மனைவியையும் நான்கு வயது மகளையும் 2017ஆம் ஆண்டில் கொலை செய்த முன்னாள் சொத்து முகவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை புதன்கிழமை (ஏப்ரல் 16) நிறைவேற்றப்பட்டது.
49 வயது டியோ கிம் ஹெங், சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சிங்கப்பூர் சிறைத்துறை கூறியது.
ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த இல்லத்தரசி 39 வயது சூங் பெய் ஷான், நான்கு வயது ஸி நிங் ஆகியோர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள அவர்களது வீட்டில் கொல்லப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் டியோ கழுத்தை நெரித்துக் கொன்று, பிறகு அவர்களது உடல்களுக்குத் தீமூட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
டியோ தொடர்பான வழக்கு விசாரணை முறையாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின்போதும் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டபோதும் அவரை வழக்கறிஞர் ஒருவர் பிரதிநிதித்தார்.
அதிபரிடம் அவர் சமர்ப்பித்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
குற்றம் புரிந்தபோது தாம் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக டியோ வாதிட்டார்.
கொலை செய்யும் நோக்கமில்லாது மரணம் விளைவித்த பிரிவின்கீழ் தமக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
டியோவுக்குச் சூதாட்டப் பழக்கம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு இறுதிக்குள் அவருக்கு ஏறத்தாழ $120,000 கடன் இருந்தது.
அவரது வீடு விற்பனைக்கு விடப்பட்டது.
இந்நிலையில், 2017 ஜனவரி 18ஆம் தேதி, நிதிப் பிரச்சினை குறித்து டியோவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தின் போது 2014ஆம் ஆண்டில் தமது மனைவிக்கு இருந்த கள்ள உறவு குறித்தும் டியோ கடிந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2017 ஜனவரி 20ஆம் தேதி, தமது மகளை டியோ பள்ளிக்கு அனுப்பவில்லை.
பள்ளிக் கட்டணம் செலுத்தப்படாததே அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து டியோவின் மனைவிக்குத் தெரியவந்ததும் தமது கணவரை அவர் இகழ்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த டியோ, தமது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
பிறகு தமது மகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
இருவரையும் கொலை செய்த பிறகு, இரு உடல்களும் கிடந்த அதே மெத்தையில் அவரும் கிட்டத்தட்ட ஒரு வாரம் படுத்து தூங்கினார்.
உடல்கள் அழுகிப் போவதை தாமதப்படுத்த அறையை அவர் குளிரூட்டினார்.
பிறகு இருவரின் உடல்களுக்கும் அவர் தீ மூட்டினார்.
அதே தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக அவர் கூறினார்.
ஆனால் மிகவும் சூடாக இருந்ததால் தமது முடிவை மாற்றிக்கொண்டதாக அதிகாரிகளிடம் டியோ தெரிவித்திருந்தார்.
திருவாட்டி சூங்கின் குடும்பம் காவல்துறையை அழைத்த பிறகு, 2017 ஜனவரி 28ஆம் தேதி (சீனப் புத்தாண்டு) இரட்டைக் கொலை வெளிச்சத்துக்கு வந்தது.