குடியிருப்பாளர்களுக்குச் சுகாதார நடவடிக்கைகளைத் தனிப்பயனாக்கிய முதல் நகரம் உட்லண்ட்ஸ்

2 mins read
d50e4f62-2b14-42a2-9b30-c71f29316e6a
உட்லண்ட்சை சிங்கப்பூரின் முதல் சுகாதார மேம்பாட்டு நகரமாக மாற்றும் திட்டம், மேலும் ஆரோக்கியமான எஸ்ஜியின் (Healthier SG) கீழ் அமையும் ஒரு முன்னோடித் திட்டமாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அதன் குடியிருப்பாளர்களுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் முதல் நகரமாக உட்லண்ட்ஸ் விளங்கும். டிசம்பர் 16ஆம் தேதி அரசாங்கக் கொள்முதல் இணையவாசலான ஜிபிஸ்சில்(GeBIZ) வெளியிடப்பட்ட சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஒப்பந்தப்புள்ளி இதனைத் தெரிவிக்கிறது.

அதற்காக, உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்களுக்குச் சுகாதார நடவடிக்கைகளை நடத்துவதற்கும் அவர்களின் சுகாதார நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் சமூகத் தலைவர்கள், துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களைச் சேர்ந்த தொண்டூழியர்கள் மற்றும் அடித்தள அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கு உதவும் ஓர் ஒப்பந்ததாரரை நியமிக்கச் சுகாதார மேம்பாட்டு வாரியம் எதிர்பார்க்கிறது.

கலாசாரச் சூழலையும், துடிப்புடன் இல்லாத முதியவர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், இளையர்கள், பல்வேறு இனச் சமூகங்கள் போன்ற பல்வேறு பிரிவினரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, குடியிருப்பாளர்கள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து செயல்பாடுகள் வடிவமைக்கப்படும் என்று வாரியம் தெரிவித்தது.

இது, உட்லண்ட்சைச் சிங்கப்பூரின் முதல் சுகாதார மேம்பாட்டு நகரமாக மாற்றும். இது மேலும் ஆரோக்கியமான எஸ்ஜியின் (Healthier SG)கீழ் அமையும் ஒரு முன்னோடித் திட்டமாகும். இது குடியிருப்பாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை எளிதான, இயற்கையான தேர்வாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் கூறுகின்றன.

ஒப்பந்தப்புள்ளி நடைமுறை ஜனவரி 16, 2026 அன்று முடிவடையும் என்பதால், உட்லண்ட்ஸ் அதற்கான முதல் நகரமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் உள்ளிட்ட முன்னோடித் திட்டத்தின் கூடுதல் விவரங்களை வழங்க வாரியம் மறுத்துவிட்டது.

சிங்கப்பூரின் வடக்கே உள்ள மூன்று பெரிய நகரங்களான ஈசூன், செம்பவாங், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் வசிப்பவர்களிடம், குடியரசின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களைவிட நாள்பட்ட நோய்களின் தாக்கம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அக்டோபரில் தெரிவித்தார்.

“இதற்கான காரணங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், வடக்கில் மக்கள்தொகையின் சுகாதாரம் தொடர்பில் அனைத்து முயற்சிகளையும் அமைப்பதே உடனடியாக நாம் செய்யக்கூடியது என்று நினைக்கிறேன்,” என்று திரு ஓங் கூறினார்.

உடல் செயல்பாடு, ஊட்டச்சத்து, தூக்கம், மனநலச் சுகாதாரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 12 முதல் 15 சமூக சுகாதார செயல்படுத்தல் உத்திகளை ஒப்பந்ததாரர் உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தப்புள்ளி மே 2026ல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் பணிகள் நடைபெற்று வருவதால், உட்லண்ட்ஸ் மறுவடிவமைக்கப்பட்டு நவீன, துடிப்பான வட்டார மையமாக மாற்றப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங், ஆகஸ்ட் 17 அன்று தமது தேசிய தினப் பேரணி 2025 உரையில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்