இயற்கையை பிரதிபலிக்கும் உட்லண்ட்ஸ் நார்த் நிலையம்

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் இணைப்பு 

இயற்கையை பிரதிபலிக்கும் உட்லண்ட்ஸ் நார்த் நிலையம்

2 mins read
7e9aa90d-155e-4171-bad0-005110971017
2021-ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 4 அன்று ஆர்டிஎஸ் இணைப்பு உட்லண்ட்ஸ் நார்த் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

2021ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக கட்டுமானப் பணிகள் தொடங்கிய ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) ‘ஆர்டிஎஸ் லிங்க் உட்லண்ட்ஸ் நார்த்’ நிலையத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன.

விரைவான எல்லை தாண்டிய பயணங்களுக்கு பயணிகள், கூடுதலாக ஒரு படி நெருங்கியுள்ளனர்.

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் இணைப்பு 2027ல் தனது சேவைகளைத் தொடங்குவதில் இதுவரையில் தாமதம் ஏற்படவில்லை.

நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள  இந்த ஆர்டிஎஸ் இணைப்பு, ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகர்  நிலையத்திற்கும் எம்ஆர்டி சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திற்கும் இடையே இயங்கும்.

இதில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களில் நிறைவுறும்.

நாள்தோறும் 40,000 பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எல்டிஏவின் ஃபேஸ்புக் பதிவோடு, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி பாதையுடன் இணைக்கப்பட்டுள்ள, கட்டி முடிக்கப்பட்ட ஆர்டிஎஸ் இணைப்பு உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

ஆர்டிஎஸ் இணைப்பு உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடம்.
ஆர்டிஎஸ் இணைப்பு உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடம். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்/ஃபேஸ்புக்

பயணிகள் ஏறி இறங்கும் இடத்தை அந்தப் புகைப்படங்களில் ஒன்று காட்டுகிறது. 

உட்லண்ட்ஸின் இயற்கை அடையாளத்தை உள்ளடக்கும் விதமாக அந்த  இடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

அந்த இடத்தில் கடினமான பாறைகள் அதிகமாக இருந்ததால், நிலையத்தின் அடித்தளத்தை அமைப்பது சவாலாக இருந்தது என்று ஆணையம் மற்றொரு பதிவில் கூறியுள்ளது.

எல்டிஏவின் இணையத்தளத் தகவல்படி, ஆர்டிஎஸ் இணைப்பு உட்லண்ட்ஸ் நார்த் நிலையம் பூமிக்கு அடியில் அதிகபட்சமாக 28 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது.

இதில் இரண்டு அடித்தளத் தளங்கள் உட்பட மூன்று தளங்கள் உள்ளன. அத்துடன் சுங்கம், குடியேற்றம், தனிமைப்படுத்தல் ஆகியவற்றுக்கான கட்டடத்திற்குச் செல்லும் நிலத்தடி இணைப்புப் பாதையும் உள்ளது என்று ஆணையம் அதன் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
உட்லண்ட்ஸ்ரயில்சிங்கப்பூர்மலேசியா