உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் இருவருக்கு ஸிக்கா நோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸிக்கா நோய் ஏடிஸ் வகை கொசுக்களால் ஏற்படுகிறது.
இவ்வகை கொசுக்கள் டெங்கிக்கும் காரணமாக உள்ளன.
நோய்வாய்ப்பட்டோர் உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 11, உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 32 ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தகவலை தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூரில் தொற்று நோய்களைச் சமாளிக்க ஆணைபெற்ற தொற்றுநோய் தடுப்பு நிலையமும் (சிடிஏ) இணைந்து வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிட்டன.
அந்த வட்டாரத்தைச் சேர்ந்தோருக்கு ஸிக்கா நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததும் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீர், கொசுப் பெருக்கம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிகளில் தேசிய சுற்றுப்புற வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வட்டாரத்தில் ஸிக்கா நோய்க்கான அறிகுறிகள் வலுவாக இருப்பது, மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை மூலம் தெரியவந்துள்ளதாக வாரியம் கூறியது.
மே 25ஆம் தேதி தொடங்கிய வாரத்திலிருந்து மூவருக்கு ஸிக்கா நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆக அண்மைய பாதிப்பு ஜூன் 11ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.
ஜூன் 12ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் ஏழு பேர் ஸிக்கா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 13 பேர் ஸிக்கா நோயால் பாதிக்கப்பட்டனர்.
ஸிக்கா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சொறி, காய்ச்சல், விழி வெண்படல அழற்சி, தசை நோவு, மூட்டு வலி, தலைவலி ஆகியவை ஸிக்கா நோய்க்கான அறிகுறிகள் என சிடிஏயின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸிக்கா நோய்க்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை ஏதுமில்லை.
கர்ப்பிணிகள் பாதிப்படைந்தால் மகப்பேறு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்று சிடிஏ தெரிவித்துள்ளது.
ஸிக்கா நோய் பற்றி கூடுதல் விவரங்களைப் பெற go.gov.sg/zikaclusters எனும் இணையப்பக்கத்தை நாடலாம். go.gov.sg/zika எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று அந்நோய்க்கான அறிகுறிகள், தடுப்புமுறை, சிகிச்சை முறை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.