மரினா சவுத் வட்டாரத்தில் ஆரோக்கியத்துக்கென உருவாக்கப்படும் ஆகப் பெரிய சுற்றுலாத் தலத்தின் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கவிருக்கின்றன.
சிங்கப்பூரில் முதல்முறையாகக் கட்டப்படும் அத்தகைய சுற்றுலாத் தலம், 2030ஆம் ஆண்டுக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஏழு மாடிக் கட்டடத்தில் வெப்பமுள்ள நீச்சல் குளங்கள், நீர்ச் சறுக்குகள், நீராவிக் குளியல் வசதிகள் ஆகியவை அமைந்திருக்கும்.
கரையோரப் பூந்தோட்டத்துக்கும் மரினா அணைக்கட்டுக்கும் அருகில் உருவாகும் ‘தெர்ம் சிங்கப்பூர்’ சுற்றுலாத் தலத்தில் 20க்கும் அதிகமான நீச்சல் குளங்களும் உடல்நலனைப் பேணும் 70க்கும் மேற்பட்ட அறைகளும் இருக்கும்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 19) சுற்றுலாத் தலத்துக்கான நில அகழ்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், நுழைவுச்சீட்டுகளுக்கான கட்டணங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், அனைவரும் வந்துசெல்லக்கூடிய வகையில் அந்தத் தலம் இருக்கும் என்று அதை உருவாக்கும் ‘தெர்ம் சிங்கப்பூர்’ குழுமம் தெரிவித்தது.
சிங்கப்பூரைச் சுற்றுலா, ஆரோக்கியம், நகர புத்தாக்கம் ஆகியவற்றுக்கான ஆசிய நடுவமாக வலுப்படுத்த ‘தெர்ம் சிங்கப்பூர்’ உதவும் என்றார் நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.
நில அகழ்வு நிகழ்ச்சியில் முன்னாள் தேசிய வளர்ச்சி அமைச்சர் மா போ டானும் கலந்துகொண்டார். அவர் ஆசியாவுக்கான ‘தெர்ம்’ குழுமத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
அவர், பிப்ரவரியில் ‘தெர்ம் சிங்கப்பூர்’ குழுமத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
ஆரோக்கியத்துக்கான புதிய தளம் அனைவருக்கும் கட்டுப்படியானதாக இருக்கும் என்று திரு மா குறிப்பிட்டார்.
“நாம் உளைச்சலான, பரபரப்பான சூழலில் வாழ்கிறோம். நம்முடைய உளைச்சலைப் போக்க இதுபோன்ற வசதி தேவை,” என்றார் அவர்.
எனவே, 2030ஆம் ஆண்டு திறக்கப்படும் தலம், அதிகப் பணம் உள்ள சுற்றுப்பயணிகளுக்கு மட்டுமல்ல, சிங்கப்பூரர்களுக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும் என்று திரு மா கூறினார்.
‘தெர்ம் சிங்கப்பூர்’ அனைத்துப் பின்னணியிலிருந்தும் வருவோருக்குச் சேவை வழங்கும் என்ற அவர், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வருகையாளர்கள் தலத்துக்கு வந்துசெல்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொன்னார்.
கிட்டத்தட்ட 720,000 சதுர அடி பரப்பளவில் ஒரு பில்லியன் வெள்ளி செலவில் சுற்றுலாத் தலம் உருவாக்கப்படுகிறது. அது, கிட்டத்தட்ட ஒன்பது காற்பந்துத் திடல்களுக்குச் சமம்.
குடும்பங்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பகுதி, மன அமைதிக்கான பகுதி, சிகிச்சைக்கான பகுதி என சுற்றுலாத் தலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

