தேர்தல் எல்லைத் தொகுதி மறுஆய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியிலும் மேரிமவுண்ட் தனித்தொகுதியிலும் எந்த மாற்றமும் இல்லாதது அங்குச் சேவையாற்றும் உறுப்பினர்களுக்கு அனுகூலமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
பீஷான் நார்த் கடைத்தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) மக்களைச் சந்திக்க சென்ற அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறினார்.
பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி எல்லையும் மேரிமவுண்ட் தனித்தொகுதியின் எல்லையும் அப்படியே இருப்பது நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கிறது என்று திரு சீ குறிப்பிட்டார்.
பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை புதிய குடியிருப்பாளர்களை வரவேற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார் அவர்.
எனவே, குழுத்தொகுதியில் புதிய வசதிகளை உருவாக்குவதிலும் சேவைகளை மேம்படுத்துவதிலும் தாமும் தமது குழுவும் தொடர்ந்து கவனம் செலுத்தவிருப்பதாக அவர் கூறினார்.
தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழுவின் அண்மைய அறிக்கையின்படி பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியில் 98,505 பேர் வாக்களிக்கத் தகுதிபெறுகின்றனர்.
திரு சீயுடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், திரு சக்தியாண்டி சுபாட், திரு சொங் கீ ஹியொங் ஆகியோர் அக்குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சேவையாற்றுகின்றனர்.

