அதிக நேரம் வேலை செய்வது பற்றியே குறைகூறாமல் பிறரது வாழ்வில் மேன்மை சேர்ப்பதை மையப்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனர் திரு நாராயண மூர்த்தி.
இந்தியர்கள் பலரும் அன்றாட வாழ்வில் சிரமப்படும் நிலையில், ஓரளவு நல்ல நிலையில் இருப்பவர்கள், தம்மைவிட வறியவர்களை நினைவுகூர்ந்து, தேசத் தந்தையரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, தம் நாட்டுக்கு எது சிறந்தது எனத் தீர்மானித்துச் செயல்பட வேண்டும் என்று திரு நாராயண மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
வியாழக்கிழமை (நவம்பர் 20) சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (எஸ்எம்யு) நடைபெற்ற தொலைநோக்குப் பார்வைத் தொடரில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
சிங்கப்பூரை உருவாக்க தம் முழுநேர வேலைகளைத் தியாகம் செய்த தேசத் தந்தையர் லீ குவான் யூ, எஸ் ராஜரத்தினம், கோ கெங் சுவீ போன்றோரையும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல் போன்றோரையும் அவர் முன்மாதிரிகளாகச் சுட்டினார்.
“இந்தியா, அர்ப்பணிப்பு மிக்கோரால் உருவாக்கப்பட்டது. தொலைதூரச் சிற்றூர்களில் உள்ள குழந்தைகளுக்கும் அடிப்படை உணவு, கல்வி, வீடு போன்றவை கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் இலட்சியம். அவர்களுடன் ஒப்பிடுகையில், நாம் செய்யும் எதுவும் ஒன்றுமில்லை என்பது போலத்தான்.
“நான் அமெரிக்காவில் தொழில்துறையில் முன்னணி வகிப்போரிடம் பேசினேன். ‘என்னைச் சுற்றியுள்ள பலரும் அறிவாளிகள். ஆனால், அவர்களைவிடக் கடினமாக உழைக்கும் ஆற்றலை இறைவன் எனக்குத் தந்துள்ளார்’ என்றே அவர்கள் கூறினர்,” என நினைவுகூர்ந்தார் திரு நாராயண மூர்த்தி.
கேள்வி-பதில் அங்கத்தை வழிநடத்திய எஸ்எம்யு அறங்காவலர் வாரியத் தலைவர் பியூஷ் குப்தா, “வேலை-வாழ்க்கை என்பது செயற்கையான பிரிவினை. உங்கள் வேலை உங்களுக்குப் பிடித்திருந்தால் அது உங்கள் வாழ்வின் உள்ளார்ந்த பகுதியாகும்,” என்றார்.
வேலையுலகின் எதிர்காலம் என்னவாக இருப்பினும், தலைமைத்துவச் சவாலே அதிமுக்கியச் சவாலாகத் திகழும் என்றார் திரு நாராயண மூர்த்தி.
தொடர்புடைய செய்திகள்
நான்காவது சிங்கப்பூர்-இந்தியா ‘ஹேக்கத்தான்’
2026ல் நடைபெறவுள்ள நான்காம் சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தோன் போட்டியும், சிங்கப்பூருக்கான இந்தியத் துணைத் தூதர் பூஜா டில்லு முன்னிலையில் தொடங்கப்பட்டது.
“எஸ்எம்யுவின் 25வது ஆண்டு நிறைவிலும் சிங்கப்பூர், இந்தியாவுக்கு இடையேயான அரசதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவிலும் இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் இன்று மிக அர்த்தமுள்ள நிகழ்ச்சி,” எனக் காணொளி வழியாகக் கூறினார் கல்வி அமைச்சரும் சமூக சேவைகள் ஒருங்கிணைப்பு அமைச்சருமான டெஸ்மண்ட் லீ.
“நான் சிங்கப்பூர் வந்தபோது கல்வி, ஆற்றல் மேம்பாட்டில் நம் ஒத்துழைப்பை விரிவாக்குவதுபற்றி ஆராய்ந்தோம். இப்போட்டி இம்முயற்சிக்கு வலுசேர்க்கும்,” என்றார் இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். அவரும் காணொளி வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
எஸ்எம்யு விரைவில் புதிதாக இந்திய அனைத்துலக ஆலோசக மன்றம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் லில்லி கோங் தெரிவித்தார். அதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கி நிறுவனர் உதே கோட்டக் தலைமைதாங்குவார்.
ஷென்ஜென் சீனாவில் தனது நான்காவது அனைத்துலக நிலையத்தையும் எஸ்எம்யு அமைக்கும்.
“அடுத்த நாராயண மூர்த்தி ஆவதற்கு இளையர்களை ஊக்குவிக்கிறோம்,” என எஸ்எம்யு நடத்திய 12வது லீ குவான் யூ அனைத்துலக வர்த்தகத் திட்டப் போட்டியை உதாரணமாகச் சுட்டினார் பேராசிரியர் லில்லி கோங்.
எஸ்எம்யு மாணவர்கள் இந்தியாவின் வரலாறு, கலாசார, ஆற்றல்பற்றித் தெரிந்துகொள்ள, மும்பைக்கு வர்த்தகக் கல்வி இயக்கங்களில், பெங்களூரில் சமூக சேவைத் திட்டங்கள், முக்கிய இந்திய நகர்களில் வேலைப்பயிற்சிகள் மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.
தாமும் சக ஊழியர்கள் அறுவரும் வெறும் 250 அமெரிக்க டாலரை முதலீட்டாகப் போட்டு இன்ஃபோசிசைத் தொடங்கியதாகக் கூறினார் திரு நாராயண மூர்த்தி.
இன்ஃபோசிஸ் வருவாய் 1982, மார்ச் 31ல் 40,000லி டாலரிருந்து 2025, மார்ச் 31ல் 19.28 பில்லியன் டாலராக அதிகரித்தது.
ஆனால் அதையும் தாண்டி, அவரது மனத்தைத் தொட்ட தருணத்தை உருவாக்கியது பணமன்று, பண்புதான்.
“என் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு துப்புரவாளர் என்னிடம் வந்து, தான் தெற்கு பெங்களூரில் இரு படுக்கையறை வீட்டைக் கட்டியுள்ளதாகக் கூறியபோது, என் கண்களில் கண்ணீர் மல்கியது,” என்றார் திரு நாராயண மூர்த்தி. அந்தத் துப்புரவாளர் வளர்ந்ததற்குக் காரணம், இன்ஃபோசிஸ் அனைத்து நிலையிலுள்ள ஊழியர்களுக்கும் பங்கு உரிமைகள் தந்ததே.
ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான ஆகச் சிறந்த குறியீடு, அதன் நீடித்த நிலைத்தன்மையே என்ற அவர், “அத்தகைய நிறுவனம் பல சவால்களைத் தாண்டி வந்திருக்கும்,” என்றும் சொன்னார்.
“ஒவ்வொரு தலைவரும் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டும். ஆனால், அப்படிச் செய்யும்போது பிறருடைய தன்னம்பிக்கையை உடைக்கக்கூடாது,” என்றார் அவர்.
“ஒவ்வொருவரும் மரியாதையாக நடத்தப்படுவது மிக முக்கியம். குறிப்பாக, அவரவர் பிள்ளைகளுக்கு முன்பு,” என்றார்.
“எந்தத் தலைவராலும் தன் அமைப்பிலுள்ள அனைவருக்கும் தன் இலக்கின் சக்தியைப் பகிர்ந்துகொள்ள முடிந்தாலொழிய வெற்றிகாணமுடியாது,” என்றார் திரு நாராயண மூர்த்தி.
“நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கான தலைசிறந்த கருவி, முன்மாதிரியாக இருந்து தலைமைதாங்குவதே! இதைத்தான் மகாத்மா காந்தி, திரு லீ குவான் யூ செய்தனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒருவர் எத்தகைய செயல்களைச் செய்கின்றார் என்பதுதான் அவரது பண்பாட்டின் முக்கிய அம்சம். அதற்கு எந்தச் சொற்களும் ஈடாகாது. அவர் அன்றாடம் காலை 6.20 மணிக்கு அலுவலகத்திற்குச் சென்றால், ஒருமுறைகூட சக ஊழியர்களிடம் ‘எத்தனை மணிக்கு வந்தீர்கள்’ எனக் கேட்பதற்குத் தேவையிராது,” என்று அவர் சொன்னார்.
ஒரு வலுவான நெறிக் கட்டமைப்பு, விரும்பத்தக்க நிறுவனத்தை உருவாக்கும் என்பது திரு நாராயண மூர்த்தியின் கருத்து.
செயற்கை நுண்ணறிவு எதிர்காலம் பற்றியும் அவர் கருத்துரைத்தார்.
இந்த உரையின் முதல் பதிப்பே ‘சேட்ஜிபிடி’யால் உருவானது எனச் சிரித்தாவாறே கூறினார் திரு நாராயண மூர்த்தி.
“முன்பு நான்கு நாள்களில் தயாரித்த உரையை, இன்று ஆறு மணி நேரத்தில் இன்னும் உயர்தரத்தில் உருவாக்கினேன். நான் இன்னும் அறிவான குறிப்புகளை உட்புகுத்தும்போது, கிடைக்கும் தீர்வும் சிறப்பாக உள்ளது,” என்றார் அவர்.

