வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பங்களில் பொய்யான விவரங்களை அளித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் எழுவர்மீதும் துப்புரவு, வசதிகள் நிர்வாக நிறுவனம் ஒன்றின்மீதும் வியாழக்கிழமை (நவம்பர் 19) குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட எழுவரில், டபுள் ஹுவாட் நிறுவன இயக்குநர் இங் லியோங் ஹுவாட்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் நால்வரின் பணிகள் குறித்து அவர் பொய்யான விவரங்களை அளித்ததாகவும் மனிதவள அமைச்சின் ஆய்வாளரிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த ஊழியர்களை வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி, சாங்கி விமான நிலையத்தில் விமானங்களைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் பயணப் பெட்டிகளைக் கையாளும் பணியிலும் ஈடுபடுத்தியதாக அமைச்சு தெரிவித்தது.
இதுதொடர்பாக 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது.
ரி சஸ்டெய்னபிலிட்டி கிளீன்டெக் நிறுவனமும் வெளிநாட்டு ஊழியர்கள் 20 பேரின் வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பங்களில் கூடுதல் நேர ஊதியத்தையும் சேர்த்து, அவர்களின் நிலையான மாதாந்தரச் சம்பளத்தை மிகைப்படுத்திக் காட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் சாங்கி விமான நிலையத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் அறுவர், வெளிநாட்டினருக்கான பயிற்சி வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பங்களில் பொய்யான விவரங்களை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அந்த ஊழியர்களை உணவகத் துறையில் துப்புரவு, பாத்திரம் கழுவுதல், உணவுப் பொட்டலம் கட்டுதல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு $3,000 சம்பளம் வழங்குவதாகக் கூறிவிட்டு, $1,300 மட்டுமே வழங்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் அக்குற்றத்திற்கு $20,000 வரை அபராதம் அல்லது ஈராண்டு வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பொய்யான விவரங்களை அளிப்பது வேலை அனுமதிச் சீட்டு கட்டமைப்பின் நம்பகத்தன்மையைக் குலைப்பதால், முதலாளிகளும் வேலைவாய்ப்பு முகவர்களும் வேலை அனுமதிச் சீட்டு கட்டுப்பாட்டாளரிடம் துல்லியமான, முழுமையான, உண்மையான விவரங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
