அமெரிக்காவின் வரிவிதிப்பு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதால் வர்த்தகங்கள், வேலைவாய்ப்புடன் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர் என்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரசி்ன் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறியுள்ளார்.
இளம் பட்டதாரிகள் வேலைப் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருந்தாலும் சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவுக்கு என்டியுசி தேவையான ஆதரவளித்துவரும் என்று திரு இங் உறுதியளித்தார்.
என்டியுசியின் மே தினப் பேரணியில் வியாழக்கிழமை (மே 1) காலை உரையாற்றிய அவர், என்டியுசி முத்தரப்புப் பங்காளிகளும் இணைந்து தொழிலாளர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் அளிக்கும் முயற்சிகளை எடுத்துவரும் என்றார்.
என்டியுசியின் புத்தாக்கக் கலாசாரம் குறித்து பேசிய அவர், வேலைப் பாதுகாப்பு மன்றத்தை புதுப்பிக்கப் போவதாகவும் அதன்மூலம் ஊழியர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளை வழங்க முற்படுவதாகவும் சொன்னார்.
தொழில்கள் உருமாற்றம், ஊழியரணிப் பயிற்சி, வழிகாட்டுத் திட்டங்கள் மூலம் ஊழியர்களுக்கு உதவுவது போன்ற அம்சங்களை தமது உரையில் குறிப்பிட்ட அவர், நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் திறம்படச் செயலாற்ற கூடுதல் முத்தரப்புப் பங்காளிகளின் ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.
வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள வேளையில் படிப்படியான சம்பள உயர்வு முறை, குறைந்த வருமான ஊழியர்களுக்குப் பயனளித்துள்ளதாகச் சொன்ன திரு இங், குறைந்த வருமான ஊழியர்களின் வாழ்வாதாரம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
என்டியுசியின் முயற்சிகள் மூலம் 155,000 குறைந்த வருமான ஊழியர்களின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டுள்ளதாக திரு இங் பெருமிதம் கொண்டார்.
மக்கள் செயல் கட்சியின் ஜாலான் காயு தனித்தொகுதி வேட்பாளருமான திரு இங், இணையவழி ஊழியர்களும் பயன் கண்டுள்ளதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“இன்று இணையவழி ஊழியர்களுக்கு மத்திய சேமநிதிச் சந்தாவும் பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டமும் உள்ளன. இது அவர்களுக்குப் பேரளவு நம்பிக்கை அளிக்கும்,” என்றார் திரு எங்.
பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளுக்கு ஆதரவு வழங்குவது பற்றி விளக்கிய அவர், 40களிலும் 50களிலும் இருப்பவர்களின் கவலைகளைக் கேட்டு அவர்களுக்கு உதவ சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்துடன் இணைந்து ஒரு பணிக்குழுவைத் தொடங்கியதாகச் சொன்னார்.
வேலையிட நியாயத்தன்மை சட்டம் பற்றி பேசிய திரு இங், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஒருவருக்கு ஏற்படுத்தும் நன்மை குறித்து விவரித்தார்.
பராமரிப்பாளர்களுக்கான உதவி பற்றி விளக்கிய அவர், மூத்த ஊழியர்கள் கூடுதல் காலம் வேலை செய்வதற்கும் அவர்களின் ஓய்வுக்காலத்திற்குச் சேமிக்கவும் வழியமைத்ததாகச் சொன்னார்.
“நிறுவனப் பயிற்சிக் குழுக்கள், வர்த்தங்கங்கள், ஊழியர்களின் முன்னேற்றத்திற்கும் நல்ல அடித்தளம் அமைத்தன,” என்றார் திரு இங்.
திரு இங்கும் என்டியுசி தலைவர் கே.தனலெட்சுமியும் இணைந்து இந்த ஆண்டின் மே தினப் பேரணியில் என்டியுசி கவனம் செலுத்தும் அம்சங்களை வெளியிட்டனர்.
‘உங்களுக்காக, உங்களுடன் - ஒவ்வோர் ஊழியரும் முக்கியம், உங்களுக்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம், உங்கள்மீது அக்கறை கொண்டிருக்கிறோம், உங்களை மேம்படுத்த உங்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறோம், முத்தரப்புக் கொள்கை, அரசாங்கத்துடனான இருதரப்புப் பங்காளித்துவம்’ உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.