அமைச்சர்களின் ஊதியம் குறித்து கூடுதல் வெளிப்படைத்தன்மைக்குப் பாட்டாளிக் கட்சி அழைப்பு

அமைச்சர்களின் ஊதியம் குறித்து கூடுதல் வெளிப்படைத்தன்மைக்குப் பாட்டாளிக் கட்சி அழைப்பு

2 mins read
cc6fa0ac-ba82-465c-805c-25b6b680e141
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

அரசியல் பதவிகளுக்கான சம்பளக் கட்டமைப்பின் பரந்த கொள்கைகளைப் பாட்டாளிக் கட்சி ஆதரிக்கும்போதிலும் அமைச்சர்களின் ஊதியம் குறித்த கூடுதல் வெளிப்படைத்தன்மைக்கு அது கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் பதவிகளுக்கான சம்பளத்தைக் கணக்கிடும் முறை குறித்து அரசாங்கத்துடன் அதற்குத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வருகிறது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 10) தெரிவித்தார்.

‘எம்ஆர்4’ தரத்திலிருக்கும் அமைச்சர்களின் மொத்த ஊதியம் குறித்த கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவை. வருடாந்தரச் சம்பள அளவுகோலுடன் ஒப்பிடும்போது, இது அவர்கள் உண்மையில் ஈட்டும் தொகை குறித்த துல்லியமான தகவலைத் தரும் என்றார் அவர்.

அரசியல் பதவிகளுக்கான சம்பள மாற்றங்கள் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய திரு சிங், பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்குத் தமது கட்சி ஆதரவளிப்பதாகக் கூறினார்.

இந்த விவாதத்தில் கருத்து தெரிவித்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பேச முன்வந்த ஒரே பாட்டாளிக் கட்சி உறுப்பினர் இவராவார்.

அமைச்சர்களின் சம்பளத்தில் செய்யப்படும் ஒரே முறை உயர்வு ஒன்பது விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற பிரதமர் லாரன்ஸ் வோங்கின் முடிவையும் ‘எம்ஆர்4’ அமைச்சர்களுக்கான $1.8 மில்லியன் அளவுகோல் சம்பளம் என்பது ஒவ்வோர் அமைச்சரும் அடைய வேண்டிய இலக்கன்று என்பதையும் பாட்டாளிக் கட்சி ஏற்றுக்கொள்கிறது.

அண்மையில் சம்பள மறுஆய்வை நடத்திய சுயேச்சைக் குழுவின் பரிந்துரைகளுடன் ஒப்பிடுகையில், இது அமைச்சர்களின் சம்பளம் தொடர்பான 'தானாகக் கட்டுப்படுத்திக் கொள்ளும்' அணுகுமுறையாகும் என்றார் திரு சிங்.

தகுதியுள்ளவர்களை ஈர்ப்பதற்கு அரசியல் பதவிகளுக்கான சம்பளம் போதுமான அளவுக்குப் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும், அரசியல் சேவை என்பது அதற்குரிய தர்மத்தைக் கொண்ட ஒரு தாரக மந்திரம், அரசியல் ஊதியம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற கருத்துகளைத் திரு சிங் ஒப்புக்கொண்டார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தை அடிப்படையாகக்கொண்டு அமைச்சர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் தங்களது 2012ஆம் ஆண்டு யோசனையைப் பாட்டாளிக் கட்சி இன்னமும் தொடர்ந்து ஆதரிப்பதாக அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம், பொதுத்துறை நியமனதாரரின் சம்பளத்திலிருந்து பெறப்படுவதாகும். தங்களின் இந்த யோசனையின்கீழ், காலப்போக்கில் அமைச்சரின் மொத்தச் சம்பளத்தில் ஏற்படும் உயர்வு மிகவும் மிதமானதாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
பிரித்தம் சிங்பாட்டாளிக் கட்சிஊதியம்அமைச்சர்