சிங்கப்பூர் பொருளியல் உத்தியை மறுபரிசீலனை செய்ய பாட்டாளிக் கட்சி அழைப்பு

சிங்கப்பூர் பொருளியல் உத்தியை மறுபரிசீலனை செய்ய பாட்டாளிக் கட்சி அழைப்பு

2 mins read
4e015b12-c2a7-4929-8e37-82ffa8ef0d20
உள்நாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்குத் தனியார் மூலதனச் சந்தை நிதியுதவிகளை ஊக்குவிப்பதுடன், வர்த்தகச் செலவுகளைக் குறைக்க ஆண்டு வாடகை உயர்வுக்கு உச்சவரம்பு விதிக்கலாம் என்றும் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் பரிந்துரை செய்தார். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் பொருளியலை அதிக சமத்துவமும் அனைவரையும் உள்ளடக்கியதுமாக மாற்றுவதற்குக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் (அல்ஜுனிட் குழுத் தொகுதி) கென்னத் தியோங் அழைப்பு விடுத்துள்ளார். புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நாடாளுமன்றத்தில் பரிந்துரை ஒன்றை முன்வைத்து அவர் பேசினார்.

வெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாமல், வளர்ச்சியின் கட்டமைப்பில் அக்கறைகாட்டும் புதிய வளர்ச்சி மாதிரி சிங்கப்பூருக்குத் தேவை. பற்றுச்சீட்டுகள், தள்ளுபடிகள் ஆகியவற்றின் மூலம் பின்னர் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, பொருளியல் வளர்ச்சியிலேயே நியாயமான பகிர்வு இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகச் செலவுகள், நிலக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், தொழில்முனைப்பையும் புத்தாக்கத்தையும் ஊக்குவிக்க நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு சிறப்பு மண்டலம் ஒன்றை உருவாக்க அவர் பரிந்துரைத்தார்.

நிலத்தின் விலையைப் பற்றாக்குறை அடிப்படையில் நிர்ணயிக்காமல், மேம்பாட்டுச் செலவின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். இளையர்கள் ஆய்வு, வேலை செய்யும் இடத்துக்கு அருகிலேயே கட்டுப்படியான விலையில் வசிக்க வழிசெய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ஆதரித்துப் பேசிய பாட்டாளிக் கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஜேமஸ் லிம் (செங்காங் குழுத் தொகுதி), பன்னாட்டு நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருக்கும் பாரம்பரிய முறையிலிருந்து விலகி, உள்நாட்டுச் சிறிய, நடுத்தர நிறுவனங்களை நாட்டின் முதன்மைப் பொருளியல் இயந்திரமாக மாற்ற வேண்டும் என்றார்.

உள்நாட்டு நிறுவனங்களின் ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளுக்குத் தனியார் மூலதனச் சந்தை நிதியுதவிகளை ஊக்குவிப்பதுடன், வர்த்தகச் செலவுகளைக் குறைக்க ஆண்டு வாடகை உயர்வுக்கு உச்சவரம்பு விதிக்கலாம் என்றும் அவர் பரிந்துரை செய்தார்.

நிலத்தின் மதிப்பு பற்றி பேசிய பாட்டாளிக் கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான லூயிஸ் சுவா (செங்காங் குழுத் தொகுதி), அரசாங்க நிலத்தின் உரிமையாளராக அரசு செயல்படும்போது அது வர்த்தகம், புத்தாக்கம் ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.

நிலம், கட்டடங்கள் ஆகியவற்றின் மூலம் வருவாயை அதிகப்படுத்துவது நிலக் கொள்கைகளில் இனி முதன்மை நோக்கமாக இருக்கக்கூடாது என்றார் அவர்.

மாறாக, உத்திபூர்வ மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய இடங்களைப் பொறுத்தவரை ஏலக்குத்தகையின்போது அதிக தொகை கொடுக்க முன்வந்தவர்களிடம் நிலத்தைக் கொடுப்பதைவிட தரத்துக்கும் விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை வழங்கும் அணுகுமுறையை கையாளலாம் என்று திரு சுவா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பாட்டாளிக் கட்சிநாடாளுமன்றம்பொருளியல்பரிந்துரை