பாட்டாளிக் கட்சி வரும் பொதுத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வியாழக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்டுள்ளது.
பொருள் சேவை வரிக்கான விலக்குகள், குறைந்தபட்ச சம்பளம், சொத்து வரி உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைக்கும் அந்த 122 பக்க அறிக்கையைக் கட்சியைச் சேர்ந்த மூவர், கேலாங் வட்டாரத்திலுள்ள அதன் தலைமையகத்தில் வெளியிட்டனர்.
‘வாழ்க்கைச் செலவினம் குறித்த கவலைகள்’, ‘பொருளியல் வளர்ச்சியும் வாய்ப்புகளும்’, ‘ஒருங்கிணைப்பும் சமத்துவமும்’, ‘பொறுப்பேற்பும் ஜனநாயகமும்’, ‘பாதுகாப்பும் உலக அரசியலும்’ ஆகிய ஐந்து பிரிவுகளை அந்த அறிக்கை கொண்டுள்ளது.
அதிக மீள்திறனுடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய, ஜனநாயக சிங்கப்பூருக்கான நோக்கத்தை இந்த அறிக்கை கொண்டிருப்பதாக அக்கட்சியின் கொள்கை ஆய்வுத் தலைவர் ஜெரால்ட் கியாம் தெரிவித்தார்.
திரு கியாம், இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம், திருவாட்டி ஹீ டிங் ரூ ஆகியோர் இடம்பெற்ற குழு, அறிக்கையின் வெவ்வேறு பகுதிகளைச் செய்தியாளர்களிடம் விளக்கியது.
தேர்தல் அறிக்கையைப் பற்றி மட்டும் பேசிய அந்தக் குழுவில், கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தலைவர் சில்வியா லிம், துணைத் தலைவர் முஹம்மது ஃபைஷல் அப்துல் மனாப் ஆகியோர் இடம்பெறவில்லை.
சிறிய இடைவேளைக்குப் பிறகு, கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள நான்கு புதுமுகங்களை அறிமுகப்படுத்த திரு சிங்கும் திருவாட்டி லிம்மும் வந்திருந்தனர்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் நீக்கம், தகவல் சுதந்திரச் சட்டத்தின் அறிமுகம் உள்ளிட்டவை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள 125 கொள்கைப் பரிந்துரைகளில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
அறிக்கையின் தொடக்கத்திலுள்ள தலைமைச் செயலாளர் செய்தியில் திரு சிங், நாட்டின் நலனைக் கருதி செயல்படும் உண்மைப்பற்றுள்ள எதிர்க்கட்சிக்குச் சிங்கப்பூரின் அரசியல் கட்டமைப்பில் இடமுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுத்தாக்கல் நாளுக்கான தேதியும் (ஏப்ரல் 23) வாக்களிப்பு நாளுக்கான தேதியும் (மே 3) அறிவிக்கப்பட்ட சில நாள்களுக்குள் சிங்கப்பூரின் ஆகப் பெரும் எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.