சிங்கப்பூர் பொருளியல் குறித்து நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி தீர்மானம்

சிங்கப்பூர் பொருளியல் குறித்து நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி தீர்மானம்

2 mins read
c2220192-0bce-4a7e-bdbd-4e628db5beec
சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், தங்களது கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள தீர்மானம் குறித்து பாட்டாளி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கென்னத் தியோங்கும் ஜேமஸ் லிம்மும் (வலது) விளக்கமளித்தனர். - படம்: சாவ்பாவ்

நாட்டின் பொருளியல் தொலைநோக்குப் பார்வை குறித்து பேசவும் அரசாங்கத்தின் பொருளியல் திட்டங்களுக்குப் பதிலளிக்கவும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளது.

அக்கட்சியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இதில் உரையாற்றவுள்ளனர். புதுமைப் புத்தாக்கம், வணிகச் செலவினங்கள், வேலைவாய்ப்புகள், சிங்கப்பூர் நிறுவனங்கள் வட்டார அளவில் விரிவடைவதற்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவர்கள் பேசவுள்ளனர்.

தீர்மானத்தைக் கொண்டுவந்த அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங், அதற்கு ஆதரவளித்த செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் இருவரும் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இத்திட்டங்களை விளக்கினர்.

இத்தீர்மானம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி, தொழில்முனைவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் குடும்பங்களும் வணிகங்களும் வெற்றிபெறுவதற்கும் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கும் புத்தாக்க யோசனைகள் செழித்தோங்குவதற்கும் வாய்ப்பளிக்கும் சமத்துவமிக்கப் பொருளியலை நாடாளுமன்ற அவை நம்புகிறதா எனக் கேட்கிறது.

இரண்டாம் பகுதி, துடிப்பான உள்ளூர் நிறுவனங்கள், வலுவான உள்நாட்டுத் தேவை, சிங்கப்பூரர்களின் வெளிநாட்டு மூலதன முதலீடுகள் ஆகியவற்றால் இயங்கும் பொருளியல் எந்திரத்தை அவை நம்புகிறதா எனக் கேட்கிறது.

முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினரான கென்னத் தியோங், தற்போதைய முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முயற்சியாக, பாட்டாளிக் கட்சி தனது சொந்தப் பொருளியல் வழிகாட்டியை எழுத விரும்புவதாகக் கூறினார்.

கடந்த காலத்தில் சிங்கப்பூர்ப் பொருளியல் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இயங்கியது. அத்திட்டம் நன்றாகச் செயல்பட்ட போதிலும், இப்போது சவால்களை எதிர்கொள்கிறது.

ஆசியாவின் பிற பகுதிகளில் மனிதவள, வாடகைச் செலவுகள் குறைவாக இருப்பதால், நிறுவனங்கள் தங்களின் வட்டாரத் தலைமையகங்களை அங்கு மாற்றுகின்றன என்று தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் திரு தியோங் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தனது பொருளியல் ஆய்வறிக்கையை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டதை திரு ஜேமஸ் லிம் சுட்டிக்காட்டினார். வரும் மாதங்களில் அவ்வறிக்கையின் விவரங்கள் குறித்து பாட்டாளிக் கட்சி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும். அதேவேளையில், அவ்விவரங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த தனது சொந்தத் தொலைநோக்குப் பார்வையையும் கட்சி முன்வைக்கும் என்று அவர் கூறினார்.

பாட்டாளிக் கட்சியின் யோசனைகள் அரசாங்கத் திட்டங்களுக்கு மாற்றாக இல்லாமல், அவற்றின் குறைகளை நிவர்த்தி செய்யும் துணைத் திட்டமாகவே இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தீர்மானத்தைத் தொடங்கிவைத்து திரு தியோங் 40 நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். இறுதியில் அவர் நிறைவுரையாற்றுவார். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேச தலா 20 நிமிடங்கள் வழங்கப்படும்.

கடைசியாக 2023ல் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானத்தைத் தாக்கல் செய்திருந்தது. வாழ்க்கைச் செலவினம் குறித்து அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் விவாதத்தை எழுப்பினார். ஏழு மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மக்கள் செயல் கட்சியின் திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேறியது. திருத்தப்பட்ட தீர்மானத்துக்கு எதிராகப் பாட்டாளிக் கட்சி வாக்களித்தது.

குறிப்புச் சொற்கள்
பாட்டாளிக் கட்சிநாடாளுமன்றம்தீர்மானம்