எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி வரும் பொதுத்தேர்தலில் நான்கு புதிய வேட்பாளர்களைக் களமிறக்கவிருக்கிறது.
‘சென்ஸ்மேக். ஏஐ’ தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநரான 36 வயது திரு கென்னத் தியோங் பூன் கியெட் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிடவிருக்கிறார்.
அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தைச் சேர்ந்த மூத்த சொத்து நிர்வாகியான திரு அப்துல் முஹைமின் அப்துல் மாலிக், 36, செங்காங் குழுத்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
மற்ற இரண்டு புதுமுகங்களில் ஒருவர், பன்னாட்டு நிறுவன வழக்கறிஞர் சிட்டி அலியா அப்துல் ரஹிம் மட்டார், 43.
மற்றொருவர், முன்னாள் அரசதந்திரியாகப் பணியாற்றி, தற்போது ‘ஆசிய கொடை வட்டம்’ (Asia Philanthropy Circle) என்ற உள்ளூர் அறநிறுவனத்தில் வேலை செய்துவரும் 33 வயது திருவாட்டி ஐலீன் சோங்.
திருவாட்டி அலியாவும் திருவாட்டி ஐலீனும் எங்கு போட்டியிடவுள்ளனர் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கும் பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம்மும் கேலாங்கிலுள்ள பாட்டாளிக் கட்சியின் தலைமையகத்தில் இந்த நால்வரையும் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) அறிமுகம் செய்தனர்.
அவர்களை அறிமுகப்படுத்துமுன் 122 பக்கங்கள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையையும் பாட்டாளிக் கட்சி வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
‘சிங்கப்பூருக்கு உழைக்கிறோம்’ (Working for Singapore) என்ற முழக்கவரியே அறிக்கையின் தலைப்பாகவும் உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய திரு சிங், “கட்சி வளர நம்மைவிட சிறந்த தரத்தில் உள்ள மக்கள் தேவைப்படுகின்றனர். கட்சியை எதிர்காலத்திற்கு முன்னெடுத்துச் செல்வோரைக் காண்பதில் கட்சியிலுள்ள நம் எல்லாருக்கும் ஈடுபாடு உள்ளது என நான் நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.
வேட்பாளர்கள் போட்டியிடப்போகும் தொகுதிகள் குறித்து கட்சி முடிவுசெய்துள்ளது என்றும் அதுபற்றி அனைவருக்கும் காலப்போக்கில் தெரியவரும் என்றும் திரு சிங் கூறினார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதே பாட்டாளிக் கட்சியின் இடைக்காலக் குறிக்கோள். ஆயினும், இம்முறை மொத்தம் 97 எம்.பி.க்களுக்கான இடங்கள் உள்ளநிலையில், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்களில்கூட வேட்பாளர்களை நிறுத்த இயலாது என்று திரு சிங் தெரிவித்துள்ளார்.