தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் காப்புறுதியாக இருக்க விரும்பும் பாட்டாளிக் கட்சி

2 mins read
3d6288ab-d94e-4c35-9700-73f1618b4f3c
முன்னாள் மலேசியச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் (இடது) முன்னாள் அம்னோ தகவல்துறை தலைவர் ‌‌‌ஷாரில் ஹம்டன் (வலது) ஆகியோர் இணைந்து நடத்தும் பிரபல ‘கெலுவார் செகஜாப்’ என்ற வலையொளி நிகழ்ச்சியில் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் (நடுவில்) முதன்முறையாகக் கலந்துகொண்டு பேசினார். - படம்: பிரித்தம்சிங்76/ இன்ஸ்டகிராம்

மக்கள் செயல் கட்சியில் ஒருவேளை பெரிய கோளாறு ஏற்பட்டால் சிங்கப்பூரை முன்வந்து நிர்வகிக்க தயார்நிலையில் இருக்க பாட்டாளிக் கட்சி விரும்புகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கூறியுள்ளார்.

“இத்தனை ஆண்டு அனுபவம் இருப்பதால் நாங்கள் தயார் என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அதுதான் சிங்கப்பூருக்கு ஒரு பெரிய காப்புறுதியாக இருக்கும் என்றார் திரு சிங்.

“நானும் என் சக ஊழியர்களும் இன்று அந்த நிலையில் இருக்கிறோம் என்று சொல்லவரவில்லை. ஆனால் நிச்சயமாகக் கட்சியை அந்த நிலைக்குக் கொண்டுவர விரும்புகிறோம்,” என்றார் அவர்.

முன்னாள் மலேசியச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் நடத்தும் பிரபல வலைப்பதிவு நிகழ்ச்சியில் திரு சிங் முதன்முறையாகப் பேசினார்.

திரு கைரியுடன் முன்னாள் அம்னோ தகவல்துறை தலைவர் ‌‌‌ஷாரில் ஹம்டன் ‘கெலுவார் செகஜாப்’ (Keluar Sekejap) என்ற வலையொளியை நடத்துகின்றனர்.

ஜூன் 24ஆம் தேதி யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட இரண்டு மணி நேர நேர்காணலில் சிங்கப்பூரின் பிரதமராகத் தமக்கு விருப்பம் இல்லை என்று திரு சிங் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரில் எதிர்க்கட்சி குறித்த சிந்தனையை வழக்கமாக்குவதுதான் என் கடமை என்று நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

திறம்பட செயல்படக்கூடிய ஜனநாயக நாடாளுமன்றத்தை உருவாக்க தம்மைப் போல சிந்திக்கக்கூடியோரைக் கொண்டுவர விரும்புவதாகவும் திரு சிங் பகிர்ந்துகொண்டார்.

திரு சிங்கின் பின்னணி, அரசியலில் அவர் சேர்ந்ததற்கான உந்துதல், அண்மையில் நடந்துமுடிந்த பாட்டாளிக் கட்சியின் உத்திகள், சிங்கப்பூர் அரசியல் சூழலில் கட்சியின் பங்கு என வலைப்பதிவு பல விவகாரங்களை அலசி ஆராய்ந்தது.

திரு சிங் தமது நீதிமன்ற வழக்கை எவ்வாறு கையாண்டார் போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

முன்னாள் பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ராயிஸா கான் தொடர்பிலான விசாரணையில் நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதற்காக பிப்ரவரியில் திரு சிங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதாக அவர் கூறினார்.

பொதுத் தேர்தலின்போது அந்த வழக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையையும் திரு சிங் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்