மக்களுக்கு நன்றிகூறினார் பாட்டாளிக் கட்சியின் ஆண்ட்ரே லோ

1 mins read
790dc243-30ac-4afa-afc3-d16e5e50acfc
ஜாலான் காயு தனித்தொகுதி மக்களின் ஆதரவுக்கு நன்றிகூறிய பாட்டாளிக் கட்சியின் திரு ஆண்ட்ரே லோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜாலான் காயு தனித்தொகுதியில் ஊழியரணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திரு இங் சீ மெங்கிற்கு எதிரான தமது முதல் தேர்தல் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்ததாக பாட்டாளிக் கட்சி வேட்பாளர் ஆண்ட்ரே லோ தெரிவித்துள்ளார்.

56 வயது திரு இங், மே 3 பொதுத் தேர்தலில் 51.47% வாக்குகள் பெற்று திரு லோவைப் பின்னுக்குத் தள்ளினார். திரு லோ 48.53% வாக்குகளைப் பெற்றார்.

பொதுத் தேர்தலில் தோல்வியுற்றபோதும் குடியிருப்பாளர்களிடமிருந்து வந்த ஆதரவுக்கு நன்றி கூறியதோடு அங் மோ கியோவிலிருந்து புதிதாக வரையறுக்கப்பட்ட ஜாலான் காயுவில் தமது அணியின் சாதனையை எண்ணி பெருமிதம் கொள்வதாகத் திரு லோ தெரிவித்தார்.

“இது மிகவும் கடுமையான போட்டியாக இருக்கும் எனக்கு ஏற்கெனவே தெரியும். நூலிழையில்தான் வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்த்தபோதும் முடிவுகள் எங்கள் பக்கம் வரவில்லை. இருப்பினும் வலுவான பிரசாரத்தை நடத்திய என் அணியையும் தொண்டூழியர்களையும் பாராட்டுகிறேன்,” என்றார் அவர்.

ஜாலான் காயுக்கு மே 4ஆம் தேதி காலை சென்று மக்களைச் சந்தித்து நன்றிகூறினார் 33 வயதான திரு லோ. குடியிருப்பாளர்கள் சன்னலிலிருந்து எட்டிப்பார்த்து திரு லோவை நோக்கி கை அசைத்து ஆதரவை வெளிப்படுத்தினர்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்ற திரு லோ, தோல்வியுற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதால் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படும் வாய்ப்பைப் பெறுகிறார்.

குறிப்புச் சொற்கள்