தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேவைகளின் அடிப்படையிலான ‘சிஓஇ’ முறைக்குப் பாட்டாளிக் கட்சி அழைப்பு; பரிந்துரையை ஏற்க மறுத்த தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர்

2 mins read
77576443-b21c-409d-9a41-5a549a05a990
பாட்டாளிக் கட்சியின் பரிந்துரையைக் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்றபோதிலும் அதை நடைமுறைப்படுத்துவதால் வெகுசிலருக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்றார் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ். - படம்: சாம்பியன் மோட்டோர்ஸ்

தேவைகளின் அடிப்படையிலான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) முறையை நடைமுறைப்படுத்த பாட்டாளிக் கட்சி அழைப்பு விடுத்தது.

உடற்குறையுள்ளோர், சிறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் போன்ற பிரிவினருக்குத் தனியார் கார் உரிமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் அத்தகையோருக்கு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடிகளை வழங்க வேண்டு்ம் என்றும் பாட்டாளிக் கட்சி உறுப்பினரும் செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான இணைப்பேராசிரியர் ஜேமஸ் லிம் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 22) நாடாளுமன்றத்தில் பரிந்துரையை முன்வைத்தார்.

பாட்டாளிக் கட்சியின் இந்தப் பரிந்துரையைக் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்றபோதிலும் அதை நடைமுறைப்படுத்துவதால் வெகுசிலருக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்றார் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்.

மாறாகப் பலருக்குப் பலன் அளிக்கக்கூடிய பொதுப் போக்குவரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் மூலம் ஆண்டுக்கு $4 பில்லியனிலிருந்து $6 பில்லியன் வரை வசூலிக்கப்படுகிறது. உயர்தர பொதுப் போக்குவரத்துச் சேவையைக் கட்டுப்படியான கட்டணத்தில் வழங்க இத்தொகையைக் கொண்டு மானியங்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் சியாவ் தெரிவித்தார்.

சிறு பிள்ளைகள் அல்லது மூத்தோரைக் கொண்ட குடும்பங்களுக்காக வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடிகள் அல்லது மானியம் கேட்டு பல மேல்முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் திரு சியாவ் கூறினார்.

ஆனால், குறிப்பிட்ட பிரிவினருக்காக வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடிகள், மானியம் வழங்குவது சிரமம் என்றார் அவர்.

சிஓஇ மானியம் மூலம் ஒரு குடும்பத்துக்குப் பல ஆயிரம் வெள்ளி மானியம் வழங்குவதைவிட அத்தொகையைப் பயன்படுத்தி கூடுதல் குடும்பங்களுக்கு உதவலாம் என்று திரு சியாவ் கூறினார்.

மேலும், மானியம் அல்லது தள்ளுபடியைப் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிப்பது எளிதன்று என்றார் அவர்.

அதை எவ்வாறு நிர்ணயித்தாலும் சிஓஇ மானியம், தள்ளுபடி ஆகியவற்றுக்குத் தகுதி பெறாத பிரிவினரும் இருப்பர் என்று அமைச்சர் சியாவ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்