பாட்டாளிக் கட்சி அரசாங்கக் கொள்கைகள் குறித்து அண்மையில் எழுப்பிய கருத்துக்கு மக்கள் செயல் கட்சி பதிலளித்துள்ளது.
பாட்டாளிக் கட்சி, தான் முன்வைத்த 15 கொள்கைகளின் சில அம்சங்களைத்தான் அரசாங்கம் பின்னர் நடப்புக்குக் கொண்டுவந்ததாக இதற்குமுன் கூறியது.
அதற்குப் பதிலளித்த மக்கள் செயல் கட்சி அவற்றுள் பெரும்பாலான யோசனைகள் அதற்கு முன்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மற்றவர்களாலும் முன்வைக்கப்பட்டன என்று கட்சியின் வலைப்பதிவில் குறிப்பிட்டது.
இதர நாடுகளில் உள்ள அரசாங்கத்தை அடிக்கடி குறைகூறும் எதிர்க்கட்சிகள் போல் இல்லாமல் பாட்டாளிக் கட்சியின் குறைகூறல் மக்கள் செயல் கட்சியின் வெற்றிகளுக்குத்தான் வித்திடுகிறது என்று மக்கள் செயல் கட்சி அதன் பதிவில் சொன்னது.
“அவர்கள் மக்கள் செயல் கட்சியுடன் எவ்வளவு ஒத்துப்போகிறார்கள் என்றால் எங்கள் கொள்கைகளே தோன்றுகிறது என்று சொல்லும் அளவுக்கு ஒத்துப்போகிறார்கள்,” என்று அது கூறியது.
எந்த ஒரு குறிப்பிட்ட யோசனைக்கு ஒருவர் அல்லது ஒரு அமைப்புத்தான் காரணம் என்று சொல்லிவிடமுடியாது என்ற மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சிக்கு முன்னரே சில கொள்கைகள் பற்றி நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் எழுப்பிய பரிந்துரைகளைச் சுட்டியது.
உதாரணமாக பெற்றோர் விடுப்பைப் பொருத்தவரை பாட்டாளிக் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் 2020ஆம் ஆண்டு அதுகுறித்து பேசுவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே 2008ஆம் ஆண்டு நீக்குப்போக்கான இன்னும் தாராள பெற்றோர் விடுப்புக்காகத் தனது உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதை மக்கள் செயல் கட்சி குறிப்பிட்டது.
வீட்டு ஆதரவு பற்றி பாட்டாளிக் கட்சி உறுப்பினர் லூயிஸ் சுவா 2023ஆம் ஆண்டு முன்வைத்தார். ஆனால் 2022ஆம் ஆண்டே மக்கள் செயல் கட்சி உறுப்பினர் கேரி டான் இடைக்கால வாடகைக் கழிவுகள் பற்றி எடுத்துரைத்தார்.

