பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா, வேலை நிமித்தமாக நியூயார்க் நகரில் வசிப்பதாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) அறிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்பதை இது குறிக்கிறது.
லிங்க்டினின் ஒரு பதிவில், அண்மையில் தனது நிறுவனத்தில் யமடா கன்சல்டிங் குரூப் யுஎஸ்ஏ-வின் நிர்வாக இயக்குநராக ஒரு புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக திரு பெரேரா கூறினார். இது, யமடா கன்சல்டிங் குரூப்பின் அமெரிக்க அலுவலகமாகும்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, திரு பெரேரா எதிர்க்கட்சியான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) பல நிகழ்வுகளில் காணப்பட்டு சமூக ஊடகங்களில் அதைப் பற்றிப் பதிவிட்ட பிறகு, அவர் அந்த கட்சியில் சேர்ந்துவிட்டார் என்ற ஊகங்கள் பரவி வந்தன.
பிஎஸ்பி-யும் திரு பெரேராவும் தான் கட்சிக்கு உதவுவதாகவும், அதில் உறுப்பினராக இல்லை என்றும் கூறியிருந்தனர். ஆனால், நவம்பர் 2025க்குள் நடைபெறவிருக்கும் தேர்தலில் வேட்பாளராக அவர் நிறுத்தப்படலாம் என்ற ஊகத்துடன் களத்தில் முணுமுணுப்புகள் தொடர்ந்தன.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, திரு பெரேரா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
“இப்போதைக்கு நான் பதிவிட்டவற்றுடன் கூடுதலாக சேர்க்க எதுவும் இல்லை,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
திரு பெரேரா இன்னும் கட்சியில் ஒரு தொண்டூழியராக இருப்பதாக பிஎஸ்பி செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார். நியூயார்க் நகரத்திற்கு அவர் குடிபெயர்ந்ததன் மூலம், அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
54 வயதான திரு பெரேரா, முதன்முதலில் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளராக 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். 2020ல் அல்ஜுனிட் குழுத்தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பு, ஒரு முறை அவர் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
கட்சியின் அப்போதைய சக உறுப்பினரான நிக்கோல் சியாவுடனான கடந்தகால காதல், இணையத்தில் கசிந்த காணொளி மூலம் அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து, ஜூலை 2023ல் அவர் பாட்டாளிக் கட்சியில் இருந்து விலகினார். 2020 பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக இருந்த திருமதி சியாவும் கட்சியை விட்டு வெளியேறினார்.


