ஏங்கர்வேல் கிரசெண்ட் அருகிலுள்ள திறந்தவெளியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) இரவு, பாட்டாளிக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. மழை பெய்த பிறகு தரை ஈரமாக, சகதி நிறைந்ததாக இருந்த நிலையிலும் மக்கள் திரளாகக் கூடினர்.
கட்சியின் நிறமான இள நீல நிறச் சட்டைகளைச் சிலர் அணிந்திருந்தனர். கட்சிக்கொடியில் இடம்பெறும் சுத்தியல் வடிவிலான பலூனைக் கூட்டத்தினரில் சிலர் கையில் பிடித்திருந்தனர். கூட்டத்துக்கு முன்னதாக அந்தப் பலூன் சுத்தியல்கள் தலா நான்கு வெள்ளிக்கு விற்கப்பட்டன. வேறு சிலர் பாட்டாளிக் கட்சிக் கொடியையும் தேசியக் கொடியையும் கையில் பிடித்துக்கொண்டு அசைத்தனர்.
இரவு ஏறத்தாழ 7.45 மணிக்குப் பிரசாரக் கூட்டம் தொடங்கியது. ஜெரால்ட் கியாம், டெனிஸ் டான், சித்தி ஆலியா உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் உரையாற்றினர்.
சிங்கப்பூரின் தொலைத்தொடர்புத் துறையில் சிங்டெல் மட்டும் இருந்தபோது விலை அதிகமாக இருந்ததாகவும் 2000ஆம் ஆண்டு முதல் எம்1, ஸ்டார்ஹப் போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு துறை மேம்பட்டதாகவும் திரு கியாம் கூறினார்.
“அதேபோலத்தான் அரசியல் பன்முகத்தன்மை மூலம் அரசாங்கத்தினர் மக்கள் சொல்வதற்கு அதிகம் செவிசாய்ப்பர். மேலும் உழைப்பர். நல்ல திட்டங்களை முன்வைப்பர். சிங்கப்பூரை இவ்வாறாகத்தான் முன்னேற்ற முடியும்,” என்று அவர் கூறினார்.
பாட்டாளிக் கட்சிக்கான வாக்கு, ஆர்ப்பாட்டத்திற்கான வாக்கு அல்ல என்றும் அது நாடாளுமன்றத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வாக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
திரு கியாமிற்குப் பிறகு பேசிய திரு டெனிஸ் டான், அமெரிக்க வர்த்தக வரிகளால் தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலுக்கிடையே அரசாங்கத்தைப் பொறுப்புடன் முடிவெடுக்க வைப்பதற்கு நல்ல எதிரணி நாடாளுமன்றத்தில் தேவை என்று வலியுறுத்தினார்.
பொங்கோல் குழுத்தொகுதியில் போட்டியிடவுள்ள புதுமுக வேட்பாளர் ஹர்பிரீத் சிங், “கடந்த பத்தாண்டுகளில் முழுமையான பிரசாரக் கூட்டம் நடைபெறவில்லை என்பதைச் சுட்டினார். மேடையேறிப் பேச முடியாதபோதும் உங்களுக்காகப் பேசுவதை நாங்கள் நிறுத்தவே இல்லை,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜாலான் காயு தனித்தொகுதியில் போட்டியிடவுள்ள ஆண்ட்ரே லோ, பிரசார மேடை ஏறிய மற்றொரு புதுமுக வேட்பாளர்.
பாட்டாளிக் கட்சியின் முன்னோடிகளான லோ தியா கியாங், ஜே பி ஜெயரத்னம் ஆகியோரை மேடையில் நினைவுகூர்ந்த திரு லோ, இரும்பைப் போன்ற அவர்களது உறுதி தமக்கும் இருப்பதாக முழக்கமிட்டார்.
பின்னர் மேடையேறிய அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், பதற்றமிக்க அனைத்துலகச் சூழலிலும் நன்மதிப்புமிக்க, பகுத்தறிவுள்ள, பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழையலாம் என்றார்.
“கொவிட்-19 காலகட்டத்தில் பாட்டாளிக் கட்சியினரின் உழைப்பை மக்கள் செயல் கட்சியே அங்கீகரித்துள்ளது. சிங்கப்பூருக்குப் பாட்டாளிக் கட்சி மிக விசுவாசமான எதிர்க்கட்சி என்பதைக் கட்சி நிரூபித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
பிரசாரக் கூட்டம் இரவு ஏறத்தாழ 10 மணியளவில் நிறைவேறியது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நேரில் கண்டதாகக் குறிப்பிட்ட மருந்தக உதவியாளர் அஷ்வினி சுப்பையா, 30, இது உற்சாகமிகு அனுபவம் என்றார்.
“சிராங்கூன் விளையாட்டரங்கில் நடந்த பிரசாரக் கூட்டத்திற்குப்பின் இங்கு வருகிறேன். மழைக்குப் பிந்திய ஈரத்திலும் இங்கு உற்சாகம் குறைந்தபாடில்லை,” என்று அவர் கூறினார்.