பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம்முக்கு அடுத்தாண்டு திருமணம்

பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம்முக்கு அடுத்தாண்டு திருமணம்

1 mins read
3c053324-4e5a-41ee-9fb3-aefba1e24d89
பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம்முடன் துணைவர் குவா கிம் சோங். - படம்: சில்வியா லிம்/இன்ஸ்டகிராம்

பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம், தமது நீண்டநாள் துணைவரான குவா கிம் சோங்கை 2025 ஜனவரியில் திருமணம் செய்யவுள்ளார்.

தேவாலயத்தில் குடும்ப உறுப்பினர்கள் சூழ தமது திருமணச் சடங்கு நிகழப்போவதாக திருவாட்டி லிம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) சேனல் நியூஸ் ஏஷியாவின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது கூறினார்.

திருவாட்டி லிம், 2003 முதல் பாட்டாளிக் கட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக திருமணமான திரு குவாவின் மனைவி காலமானார். திருவாட்டி லிம், 59, இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஒன்றாக இருந்துவரும் இவர்கள், 2013ல் நிகழ்ந்த பாட்டாளிக் கட்சியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் முதன்முதலாக சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

2011 பொதுத் தேர்தலில் குழுத்தொகுதி ஒன்றில் வென்ற முதல் எதிர்க்கட்சி அணியில் அங்கம் வகித்த திருவாட்டி லிம், அன்று முதல் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றி வருகிறார்.

முன்னாள் தேசிய காற்பந்து வீரரான திரு குவா, 72, தமது காலகட்டத்தில் சிறந்த உள்ளூர் காற்பந்தாளராகத் திகழ்ந்தார்.

1977ல் மலேசியக் கிண்ணப் போட்டிகளில் திரு குவா சிங்கப்பூருக்காக இரண்டு கோல்களை அடித்து அதன் வெற்றிக்கு வித்திட்டார்.

திரு குவா, 11 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்களில் அறுவர், சிங்கப்பூர் காற்பந்து அணிக்காக விளையாடியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்