பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் மூவர், தங்களுக்கு எதிரான வழக்குகளைச் சந்திப்பதற்காகத் தொடங்கிய கூட்டு வங்கிக் கணக்கை மூடியுள்ளனர்.
பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், கட்சித் தலைவர் சில்வியா லிம், கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங் ஆகியோர் நிதி திரட்டுவதற்காகத் தொடங்கிய வலைப்பூவில் வியாழக்கிழமை (அக்டோபர் 2) அதனைத் தெரிவித்திருந்தனர். நீண்டகாலத்துக்கு நீடித்த வழக்குகளை எதிர்கொள்ளப் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கு வங்கிக் கணக்கை அவர்கள் பயன்படுத்தினர். எஞ்சிய தொகையை அவர்கள் அறநிறுவனங்களுக்குக் கொடுத்தனர்.
சென்ற ஆண்டு (2024) ஜூலையில் நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்ததாகத் தலைவர்கள் மூவரும் குறிப்பிட்டனர். அந்த வழக்குகளுக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணப்பட்டது. அதனால் வங்கிக் கணக்கைத் தொடரவேண்டிய அவசியம் இல்லை என்று பதிவில் தெரிவிக்கப்பட்டது.
வங்கிக் கணக்கில் எஞ்சியிருந்த $5,826.14 பாட்டாளிக் கட்சிச் சமூக நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. உதவி தேவைப்படும் குடும்பங்களுக்குச் சேவையாற்றும் நோக்கத்துடன் கட்சியால் பதிவுசெய்து தொடங்கப்பட்ட அறநிறுவனம் அது என்று தலைவர்கள் கூறினர்.
“வழக்கு நடைமுறைகள் முடிவதற்கு ஏழாண்டுகள் ஆயின,” என்று மூவரும் தெரிவித்தனர். வழக்குகள் நடைபெற்ற காலத்தில் தங்களுக்கு ஆதரவாக இருந்தோருக்கு அவர்கள் நன்றி கூறினர்.
இன்னொரு நடப்பில், பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் மூவரும் அல்ஜுனிட்-ஹவ்காங், செங்காங் நகர மன்றங்களுக்கு $57,000க்கும் மேல் நன்கொடை அளித்துள்ளனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் 2023 நவம்பரில் இரண்டு நகர மன்றங்களையும் மூவருக்கும் ஏறக்குறைய $230,000ஐக் கொடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதில் வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்குக் கிட்டத்தட்ட $173,00ஐத் தலைவர்கள் பயன்படுத்தினர். அதன் பிறகு எஞ்சிய தொகையை அவர்கள் நன்கொடையாக வழங்கினர்.
2017ல் வழக்குகள் போடப்பட்டதிலிருந்து சட்டச் செலவுகளுக்கு $3.1 மில்லியன் வெள்ளி ஆனதாக மூவரும் கூறினர். அந்தத் தொகையில் $1.4 மில்லியனுக்கும் மேல் தாங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்ததாகவும் தலைவர்கள் தெரிவித்தனர். எஞ்சிய $57,000ஐத் தாங்கள் செலவிட்ட தொகைக்கு ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளாமல் இரண்டு நகர மன்றங்களுக்கும் நன்கொடையாக வழங்க முடிவெடுத்ததாக அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
சேவைகளை வழங்கியோருக்கு முறைகேடான வகையில் கட்டணங்கள் செலுத்தப்பட்டதன் தொடர்பில் பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் மீது அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் (ஏஎச்டிசி) வழக்குகளைத் தொடுத்தது. நிர்வாக முகவராகச் செயல்பட்ட எஃப்எம் சொல்யூஷன்ஸ் அண்ட் சர்விசஸ் (FM Solutions & Services) நிறுவனத்தின் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியைப் பாட்டாளிக் கட்சி நிர்வகித்தபோது நட்டம் ஏற்பட்டதாகக் கூறி, பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் வழக்குத் தொடுத்திருந்தது. 2015ல் அந்தத் தொகுதி மக்கள் செயல் கட்சியின் வசம் சென்றது.
செங்காங் குழுத்தொகுதியைப் பாட்டாளிக் கட்சி 2020ல் வென்றதைத் தொடர்ந்து செங்காங் நகர மன்றம் அந்த வழக்கைக் கையில் எடுத்துக்கொண்டது.
இருப்பினும் கடந்த ஆண்டு ஜூலையில் இரண்டு நகர மன்றங்களுக்கும் பாட்டாளிக் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் சமரசமான முறையில் வழக்குகளுக்குத் தீர்வு எட்டப்பட்டது.