சமய போதகர் ஒருவருடனும் தனது மலாய்-முஸ்லிம் வேட்பாளர்கள் சிலருடனும் சம்பந்தப்பட்ட சந்திப்பு ஒன்று பற்றி விளக்கமளித்த பாட்டாளிக் கட்சி, தனது வேட்பாளர்களை ஆதரிக்கும் வெளிநாட்டினர் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாட்டும் இல்லை என்று பாட்டாளிக் கட்சி, சனிக்கிழமையன்று தெரிவித்தது.
அரசியல் ஆதரவுக்குக் கைம்மாறாக எந்த வாக்குறுதிகளும் தரப்படவில்லை என்றும் பாட்டாளிக் கட்சி சனிக்கிழமை (ஏப்ரல் 26) காலையில் வெளியிட்ட அறிக்கையின்வழி கூறியது.
ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள தேர்தல் இணைய விளம்பரங்களை வெளிநாட்டினர் சிலர் பதிவிட்டதாக உள்துறை அமைச்சும் தேர்தல் ஆணையமும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல 25) வெளியிட்ட தங்கள் கூட்டறிக்கையில் கூறியதை அடுத்து, பாட்டாளிக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
அந்த விளம்பரப் படைப்புகளை வெளியிட்ட வெளிநாட்டினர் மூவரில் இருவர், பாஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள். மூன்றாமவர், தற்போது ஆஸ்திரேலிய குடிமகனாக உள்ள முன்னாள் சிங்கப்பூரர்.
இவர்களது பதிவுகளைச் சிங்கப்பூரர்களின் பார்வையிலிருந்து நீக்கும்படி அதிகாரிகள், ‘மெட்டா’ தளத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பாட்டாளிக் கட்சி, தனது அறிக்கையில் “பொதுத்தேர்தலில் பங்குபெறுபவர்கள் என்ற முறையில் பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் அத்தனை இடங்களிலும் உள்ள சிங்கப்பூரர்கள் அனைவரது ஆதரவையும் நாடுகிறார்கள். எமது வேட்பாளர்களை ஆதரிக்கும் வெளிநாட்டுத் தரப்புகளின்மீது பாட்டாளிக் கட்சி எந்த ஆதிக்கத்தையும் கொண்டிருக்கவில்லை,” என்று குறிப்பிட்டது.
தங்களது அரசியல் பணியில் பாட்டாளிக் கட்சி, பல்வேறு சமயத்தவரைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டது. “சிங்கப்பூரின் பொதுவாழ்க்கை குறித்து எல்லாச் சமயங்களைச் சேர்ந்த சமயத்தலைவர்கள் பலதரப்பட்ட கருத்துகளைப் பகிர்கின்றனர்” என்று அந்தக் கட்சி கூறியது.
போதகர் நூர் டிரோஸ் என்பவர் கலந்துகொண்ட சந்திப்பில் மற்ற சமயத் தலைவர்களும் இருந்ததாகக் குறிப்பிட்ட அந்தக் கட்சி, அரசியல் ஆதரவுக்குக் கைம்மாறாக எந்த வாக்குறுதிகளும் தரப்படவில்லை என்றும் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சனிக்கிழமை 12.30 மணிக்கு ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்ட நூர் டிரோஸ், தம் பதிவு தவறாகப் புரியப்பட்டதாகக் குறிப்பிட்டார். பட்டாளிக் கட்சி தனக்கு எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்று மலாய் மொழியில் எழுதப்பட்ட அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.
அரசியலையும் சமயத்தையும் தனித்தனியாகப் பிரிப்பது நன்கு நிறுவப்பட்ட கொள்கையாகும் என்று கூறிய பாட்டாளிக் கட்சி, இந்தக் கொள்கையைத் தனது கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளதாகவும் சொன்னது.
“சிங்கப்பூரின் சமய சார்பற்ற, பல்லின, பல சமய சமுதாயத்தின்மீதும் நம் தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையைக் கட்டிக்காப்பதுமீதும் நாங்கள் உறுதியான கடப்பாட்டைக் கொண்டுள்ளோம்,” என்றது பாட்டாளிக் கட்சி.